தமிழகம்

நாங்குநேரி இடைத்தேர்தல்: காலை 9 மணி வரை 18.04% வாக்குகள் பதிவு

செய்திப்பிரிவு

நாங்குநேரி

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 18.04% வாக்குகள் பதிவாகியுள்ளன.

நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் நாராயணன், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜநாராயணன் உட்பட 23 பேர் களத்தில் உள்ளனர். 1,27,389 ஆண் வாக்காளர்கள், 1,29,748 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 3 பேர், சர்வீஸ் வாக்காளர்கள் 278 பேர் என, மொத்தம் இத்தொகுதியில் 2,57,418 வாக்காளர்கள் உள்ளனர்.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ளதுடன், தடையில்லா மின்சாரம், குடிநீர், சாய்தளம், கழிப்பறை வசதி ஆகியவை செய்யப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் வசதிக்காக 170 வாக்குப் பதிவு மையங்களில் வீல் சேர் வசதி செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் பணியில் 1,460 பேர் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு நேற்று 3-ம் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். 10 வாக்குச்சாவடி மையங்களுக்கு ஒரு மண்டலக் குழு என, மொத்தம் 29 மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒரு மண்டலக் குழு காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் கண்காணிப்புப் பணியில் 35 நுண் பார்வையாளர்கள் ஈடுபடுகின்றனர்.

16 வேட்பாளர்களுக்கு மேல் களத்தில் உள்ளதால் வாக்குப்பதிவுக்கு 2 மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக 688 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 359 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 404 விவிபாட் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவை, வாக்குச்சாவடி மையங்களுக்கு நேற்று பிற்பகல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன.

இயந்திரங்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் மாற்று ஏற்பாடு செய்ய 89 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 54 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 96 விவி பாட் இயந்திரங்கள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்புப் பணியில் எஸ்பி, 2 ஏடிஎஸ்பிகள், 17 டிஎஸ்பிகள் உட்பட 2,500 போலீஸார் ஈடுபடுகின்றனர். 73 மையங்களில் உள்ள பதற்றமான 151 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாது காப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாங்குநேரி தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மழை பெய்தாலும் கொட்டும் மழையில் குடைபிடித்த படியே வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்த வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். காலை 9 மணி நிலவரப்படி 18.04% வாக்குகள் பதிவாகியுள்ளன.

SCROLL FOR NEXT