எஸ். முஹம்மது ராஃபி
ராமேசுவரம்
தனுஷ்கோடி மன்னார் வளைகுடா கடற்பகுதியில் பருவ கால நீரோட்டத்தால் அரிச்சல்முனை கடல் நீரில் மூழ்கியதால் புனித நீராட முடி யாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலுக்குள் மகாலட்சுமி தீர்த்தம், கெந்தமாதன தீர்த்தம், சாவித்திரி தீர்த்தம், பிரமஹத்தி விமோசன தீர்த்தம், காயத்திரி தீர்த்தம், கங்கா தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், யமுனா தீர்த்தம், சங்கு தீர்த்தம், கயா தீர்த்தம், சக்கர தீர்த்தம், சர்வ தீர்த்தம், சேது மாதவர் தீர்த்தம், சிவ தீர்த்தம், நள தீர்த்தம், சாத்யாமமிர்த தீர்த்தம், நீல தீர்த்தம், சூரிய தீர்த்தம், கவய தீர்த்தம், சந்திர தீர்த்தம், கவாட்ச தீர்த்தம், கோடி தீர்த்தம் என 22 புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன.
மேலும் ராமேசுவரத்திலுள்ள அக்னி (கடல்) தீர்த்தமும், தனுஷ்கோடியில் உள்ள சேது (கடல்) தீர்த்தமும் பிரதான தீர்த்தங்களாகும். இந்த தீர்த்தங்களில் நீராடுவதால் உடலும், உள்ளமும் தூய்மை அடைவதுடன், பாவங்கள் நீங்கி புண்ணியம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் நாள்தோறும் இந்தியா முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர் கள் ராமேசுவரம் வருகின்றனர்.
இந்நிலையில் தனுஷ்கோடி மன்னார் வளைகுடா கடற்பகுதியில் பருவ கால நீரோட்டத்தால் அரிச்சல்முனையின் பெரும்பாலான பகுதி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மூழ்கிய நிலையில் காணப்படும். தற்போது அரிச்சல்முனை பகுதி மூழ்கத் தொடங்கி உள்ளதுடன் சாலையோர தடுப்புச் சுவர் கடல் நீரின் அரிப்பால் உடைந்து வருகிறது. இதனால் அரிச்சல்முனை கடல் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல இன்று முதல் (ஞாயிற்றுக்கிழமை) தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சமூக சேவகர் முகவை முனிஸ் கூறியதாவது:
அரிச்சல்முனையின் ஒரு பகுதியான மன்னார் வளைகுடா பகுதி அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மட்டும் மூழ்கி இருக்கும். ஆனால், மறுமுனை யான பாக். ஜலசந்தியில் உள்ள நிலப்பரப்பு மூழ்காமல் அப்படியே இருக்கும்.
தனுஷ்கோடி அரிச்சல் முனையில் மன்னார் வளை குடா மற்றும் பாக். ஜலசந்தி ஆகிய 2 கடல் பகுதியிலும் ஆண்டு முழுவதும் பக்தர்கள் நீராடும் வகையில் தேவையான வசதி களை தமிழக அரசு செய்து தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.