தென் இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரகத் துறையில் ரூ.80 லட்சம் செலவில் பொருத்தப்பட்டுள்ள ஹோல்மியம் லேசர் உள்ளிட்ட 3 நவீன கருவிகளை சுகாதாரத் துறை அமைச்சர் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரகத் துறையில் சிறு துளை மூலம் சிறுநீரகக் கற்களை அகற்றும் சிகிச்சை முறை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது.
மேலும், அறுவை சிகிச்சை இல்லாமல் அதிர்வலைகள் மூலம் கற்களை உடைக்கும் திறக்கும் கொண்ட கருவியும் இங்கு உள்ளது. இக்கருவி மூலம் ஓராண்டில் 1,200 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படு கிறது.
சிறுநீரக சிகிச்சைக்கான கருவிகள்
இந்நிலையில், அறுவை சிகிச்சை இல்லாமல் பெரிய சிறுநீரகக் கற்களையும் கரைக்கும் திறன் கொண்ட ஹோல்மியம் லேசர் கருவியும், ரத்த இழப்பின்றி அறுவை சிகிச்சை செய்ய உதவும் ‘ஹார்மோனிக் ஸ்கேல்பல்’ கருவியும், சிறுநீரகக் கல் அறுவை சிகிச்சையின்போது கற்களை தெளிவாகக் காட்டக் கூடிய உயர்திறன் கொண்ட ‘சி ஆர்ம்’ என்ற கருவியும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ளது.
இக்கருவிகளை தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வியாழக்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்துவைத்தார். பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
ரூ.80 லட்சம் செலவில் இக்கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. இதன்மூலம், சிறுநீரகக் கற்களை ரத்தமின்றி லேசர் உதவியால் முழுவதுமாக அகற்றி குணப்படுத்த முடியும். தமிழகத்திலேயே ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில்தான் ஹோல்மியம் லேசர் கருவி முதன்முறையாக நிறுவப்பட் டுள்ளது.
முதல்வரின் விரிவான மருத் துவக் காப்பீட்டுத் திட்ட நிதியின் கீழ் இக்கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. தென் இந்தியாவிலேயே, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில்தான் மேற்கண்ட 3 கருவிகளும் நிறுவப்பட்டுள்ளன. இதன்மூலம் தென் இந்தியாவிலேயே மிகப் பெரிய அறுவை சிகிச்சை மையமாக இந்த மருத்துவமனை விளங்கும்.
இவ்வாறு விஜயபாஸ்கர் கூறினார்.