விழுப்புரம்
அதிமுக ஆட்சி ஊசலாடிக் கொண்டிருக்கிறது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்.19) காலை, விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட அசோகபுரி, ஈச்சங்குப்பம் ஆகிய பகுதிகளில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நா.புகழேந்திக்கு ஆதரவு கேட்டு, நடைபயணம் மற்றும் திண்ணைப் பிரச்சாரம் மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொதுமக்களுடன் கலந்துரையாடினார்
அப்போது, மக்களிடையே திமுக வேட்பாளருக்கு வாக்குகள் கேட்டு, மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
"முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் சேர்த்து 122 பேர் எம்.எல்.ஏ.க்களாக இருக்கிறார்கள். ஆட்சியில் இருப்பதற்கு எவ்வளவு எண்ணிக்கை இருக்க வேண்டும். மெஜாரிட்டி எவ்வளவு இருக்க வேண்டும் ? 117 பேர் இருந்தால் ஆட்சியில் இருக்கலாம். ஐந்து பேர் மட்டும் தான் கூடுதலாக இருக்கிறார்கள். இதில் 11 பேருடைய எம்எல்ஏ பதவி உச்ச நீதிமன்றத்தில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. தீர்ப்பு வரப் போகிறது.
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேர் இந்த ஆட்சியை எதிர்த்து வாக்கு செலுத்தியவர்கள். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருக்கக் கூடாது என்று சொல்லி அவர்கள் வாக்கு செலுத்தினார்கள். இந்த ஆட்சிக்கு எதிராக ஓட்டுப் போட்டவர்கள் இன்று எம்எல்ஏ பதவியில் இருக்கிறார்கள்.
இந்த ஆட்சி ஊசலாடிக்கொண்டிருக்கிறது. இன்னும் ஒன்றரை வருடத்தில் எப்படியும் ஆட்சி போகப்போகிறது, அதுவேறு, இன்னும் ஒன்றரை மாதத்தில் 11 பேரின் தீர்ப்பு வந்துவிடும். அப்படி தீர்ப்பு வரும் போது எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருப்பதற்கு நிச்சயமாக வாய்ப்பு இருக்காது. அவர் பதவியில் இருந்து விலகவேண்டிய சூழ்நிலை வரும்.
விலகுகிறார்களோ இல்லையோ, அடுத்த தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் நிச்சயமாக அவர்களைப் புறக்கணித்து – தோற்கடிக்கத்தான் போகிறார்கள்.
இந்த ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்றுதான் இருக்கிறார்களே, தவிர மக்களைப் பற்றியோ, தமிழ்நாட்டைப் பற்றியோ, தமிழ்நாட்டு மக்களைப் பற்றியோ கொஞ்சம் கூட அவர்கள் கவலைப்படவில்லை,"
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.