தேனி
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர்கள் பிரவீன், ராகுல் அவர்களின் தந்தை உட்பட 4 பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை வரும் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் படித்த மாணவர் உதித் சூர்யாதான் நீட் ஆள்மாறாட்ட வழக்கில் முதன்முதலாகக் கைதானார். அவரைத் தொடர்ந்து தருமபுரி மற்றும் சென்னையைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பிரவீன், ராகுல், இர்பான் ஆகியோரும் கைதாகினர்.
இவர்களில், மாணவர் பிரவீன் அவரது தந்தை சரவணன் மற்றும் மாணவர் ராகுல் அவரது தந்தை டேவிஸ் ஆகிய 4 பேரும் நீதிமன்ற காவலில் உள்ளனர். இவர்கள் 4 பேரும் ஜாமீன் கோரி தேனி மாவட்ட முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீது இன்று ( அக்.19) விசாரணை நடைபெறவிருந்த நிலையில், மாவட்ட அமர்வு நீதிபதி சீனிவாசன் விடுப்பில் சென்றதால் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நீட் ஆள்மாறாட்ட வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.