தமிழகம்

திமுக தலைவர்களிடம்தான் அதிக பஞ்சமி நிலங்கள் உள்ளன: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு

ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி

திமுக தலைவர்கள்தான் பஞ்சமி நிலங்களை அதிகமாக வைத்துள்ளனர் என தமிழக பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "அதிமுகவின் நிலைப்பாடு என்றும் வெளிபடையானது. ஆனால், திமுகவின் நிலைப்பாடு உள்குத்து கொண்டது.

முரசொலி அலுவலகத்தில் பஞ்சமி நிலம் இருக்கு என்பது உலகத்துக்கே தெரியும். அதுமட்டுமல்ல அண்ணாஅறிவாலயத்தில் கூட மாநகராட்சிக்கு சொந்தமான இடம் கொஞ்சம் உள்ளது.

திமுக தலைவர்கள்தான் பஞ்சமிநிலத்தை அதிகமாக வைத்துள்ளனர் .பஞ்சமி நிலத்தை பொறுத்தவரை யார் வைத்திருந்தாலும் மீட்க வேண்டும்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் மகத்தான வெற்றியை பெறுவார்கள்.

அதனை யாராலும் தடுக்க முடியாது. மக்களின் கோரிக்கைகளை அறிந்து திட்டங்களை நிறைவேற்றவே முதல்வர் 2-து முறையாக பிரசாரம் செய்துள்ளார்.

அதனை பலவீனமாக கருதக்கூடாது. மத்திய அரசின் திட்டங்களை வரவேற்றால், பாஜகவுக்கு அடிமை என்று கூறுவதா? மத்திய நிதியை பெற பிரதமரை, மத்திய அமைச்சர்களை சந்திப்பது சகஜம் தானே.

திமுகதலைவர் ஸ்டாலின் பாஜகவை எதிர்ப்பது போல நடிக்கிறார். திமுகவுக்கு டெல்லியில் ஒரு நிலைப்பாடு, சென்னையில் ஒரு நிலைப்பாடு. ஆனால், நாங்கள் வெளிப்படை தன்மையோடு செயல்பட்டு வருகிறோம்" என்றார்.

சிறுபான்மையினர் ஓட்டுகளுக்காக சதி..

நியாயவிலைக் கடை ஊழியர்களை மிரட்டியதாக எழுந்துள்ள புகார் குறித்து "கடந்த 16-ம் தேதி இரவு நாங்குநேரி தொகுதியில் நான் தங்கியிருந்த வீட்டில் இருந்து வெளியே கிளம்பிக் கொண்டிருந்தேன். அப்போது 3 பேர் வந்து நியாயவிலைக் கடையை பிரித்து தரவேண்டும் என என்னிடம் கேட்டனர்.

இது தொடர்பாக வாட்டாட்சியரிடம் மனு கொடுங்கள். அதன் பிரதியை என்னிடம் கொடுங்கள் என்றேன். ஆனால், நியாய விலைக் கடையை பிரிக்க முடியுமா என்பதை இப்போதே சொல்லுங்கள் என்றனர். அவர்களது பேச்சு சரியில்லாததால் காலையில் வாருங்கள் எனக் கூறி அனுப்பி வைத்தேன்.

ஆனால் நான் இஸ்லாமிய சமுதாயத்தை தவறாக பேசியதாக பொய்யான தகவலை பரப்பியுள்ளனர். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல்.

இது தொடர்பாக காதர் முகைதீன், ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி போன்றவர்கள், உண்மை தெரியாமல் என்னை கண்டித்து அறிக்கை விட்டுள்ளனர்.

சிறுபான்மையினரது ஓட்டுகள் அதிமுக பக்கம் திரும்பியிருப்பதால், அந்த ஓட்டுக்களை திமுக பக்கம் திருப்பவே இந்த பொய் தகவல்களைப் பரப்பியுள்ளனர். இதனை நம்ப இஸ்லாமிய மக்கள் தயாராக இல்லை" என்று விளக்கினார்.

SCROLL FOR NEXT