புதுச்சேரி
ஸ்டாலின் பேச்சு தொலைக்காட்சித் தொடர்களில் வரும் சிரிப்பு நடிகர்களின் பேச்சைப் போல் உள்ளது என, புதுச்சேரி அதிமுக எம்எல்ஏ அன்பழகன் விமர்சித்துள்ளார்.
புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனை ஆதரித்து இன்று (அக்.18) கிருஷ்ணா நகரரில் வாக்கு சேகரிப்பில் சட்டப்பேரவை அதிமுக தலைவர் அன்பழகன் எம்எல்ஏ ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
"திமுக தலைவர் ஸ்டாலின் அரசியல் கட்சிக்குத் தலைவர் என்ற நிலையில் இருந்து தடுமாறி புதுச்சேரியில் நேற்று மாலை பிரச்சாரத்தில் தவறாக உளறிக் கொட்டியுள்ளார். தமிழகத்தின் முதல்வர் யார்? புதுச்சேரியின் முதல்வர் யார் என்று கூட தெரியாமல் தமிழகத்தின் முதல்வராக நாராயணசாமியைத் தேர்ந்தெடுத்தோம் என பிரச்சாரத்தில் கூறுகிறார். வாய்க்கு வந்தபடி ஸ்டாலின் உளறி இருப்பதை புதுச்சேரி மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவரது பேச்சு தொலைக்காட்சித் தொடர்களில் வரும் சிரிப்பு நடிகர்களின் பேச்சைப் போல் உள்ளது. ஒரு அரசியல் கட்சித் தலைவரைப் போல் இல்லை.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு முதல்வர் நாராயணசாமி போராடுவதாகவும், அதை ஆளுநர் தடுப்பதாகவும் ஸ்டாலின் கூறுகிறார். மத்தியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸுடன் கூட்டணி ஆட்சியில் இருந்த திமுக, புதுச்சேரிக்கு ஏன் மாநில அந்தஸ்து பெற்றுத் தரவில்லை? புதுச்சேரி துணைநிலை ஆளுநரை வசைபாடும் திமுக தலைவர், தமிழ்நாடு ஆளுநரைச் சந்தித்து இந்தி திணிப்பு ஆர்ப்பாட்டத்தை வாபஸ் பெற்றதாக அறிவித்தது ஏன்?
தங்களது சுயநலத்திற்காக சாதி, மதம், தமிழ் மொழியை திமுக பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். ஒரு எதிர்க்கட்சித் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக எங்கள் எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி உள்ளார். ஒரு மாநில எதிர்க்கட்சித் தலைவர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளார்.
தொடர் தோல்வியால் அரசியலை விட்டு எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி ஒதுங்கிவிட வேண்டும் என முதல்வர் நாராயணசாமி கூறுகிறார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக நம் நாட்டை ஆண்ட காங்கிரஸ் ஊழல் முறைகேடுகளின் காரணமாக இன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட பெற முடியாத பரிதாப நிலைக்குச் சென்றுள்ளது. காங்கிரஸின் தொடர் தோல்விகளுக்குப் பொறுப்பேற்று புதுச்சேரி முதல்வர் அரசியலை விட்டு ஒதுங்கி இருக்க வேண்டும்".
இவ்வாறு அன்பழகன் பேசினார்.
செ.ஞானபிரகாஷ்