தமிழகத்தில் 35 நிரந்தர மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட வுள்ளதாக சென்னை உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி சதீஷ் கே. அக்னிஹோத்ரி (பொ) தெரிவித்தார்.
உதகை மலைப்பகுதி மேம் பாட்டு திட்ட அரங்கில் சட்ட விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை நடந்தது. மாவட்ட நீதிபதி இளங்கோ வரவேற்றார். முகாமை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொ) சதீஷ் கே. அக்னிஹோத்ரி தொடக்கிவைத்துப் பேசியது:
சமுதாய மேம்பாட்டுக்கான கடமை நீதித் துறைக்கு உள்ளது. நீதித் துறையில் உள்ள வழக்கறி ஞர்கள் மக்களுக்கு சட்ட ஆலோச னைகள் மட்டும் வழங்காமல், அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவ வேண்டும். இதனால் அவர்கள் நிம்மதியான சமூக வாழ்வை வாழ முடியும். பிரச்சினை தீர்வு மையங்கள் விரைவில் திறக்கப்படவுள்ளது. இந்த மையம் மக்களின் பிரச்சி னைகளுக்குத் தீர்வு ஏற்படுத்தும். இந்த மையத்தில் பிரச்சினை தீராவிட்டால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றங் களை நாடலாம்.
இந்திய நீதித்துறை ஆங்கிலே யர்களால் அமைக்கப்பட்டது. இதனால் வழக்குகள் நிலுவை யாவதுடன், பண விரயமும் ஏற்படுகிறது. இதனால் மாற்றுத் தீர்வு அமைப்புகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. மக்கள் நீதிமன்றம், ஆலோசனை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்படுவதும், பண விரயமும் தவிர்க்கப்படுகிறது.
நீதிமன்றங்களில் குடும்ப பிரச் சினைகள் அதிகளவில் உள்ளன. மக்கள் நீதிமன்றம் மற்றும் ஆலோசனை மையங்கள் மூலம் இவற்றுக்குத் தீர்வு ஏற்படும்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட மெகா மக்கள் நீதிமன்றத்தில் 13 லட்சத்து 77 ஆயிரத்து 250 வழக்குகளுக்குத் தீர்வு ஏற்பட்டது. இதன் மூலம் ரூ.1,140 கோடி பைசல் செய்யப்பட்டது. இதில் தமிழகத்தில் ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 767 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு, ரூ.950 கோடி பைசல் செய்யப்பட்டது. இந்தியாவில் தமிழகம் முதலிடம் பெற்றது. தமிழகத்தில் நீலகிரி உள்பட 32 இடங்களில் நிரந்தர மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்படவுள்ளன என்றார்.
தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலர் அருள், நீலகிரி வழக்கறிஞர் சங்க தலைவர் அருண்குமார், மூத்த வழக்கறிஞர்கள் கிருஷ்ணமூர்த்தி, சுந்தர் ஆகியோர் பேசினர்.