பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி பணி நீக்கப்பட்ட தலைமை ஆசிரியர், ‘குடும்பத்துடன் தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை’ எனக் குறிப்பிட்டு அவர் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் நீதிபதிக்கு நேரடியாக கடிதம் அனுப்பியதால், வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.
நெல்லை மாவட்டம், வள்ளியூர் வீரபாண்டியன் பகுதியில் உள்ள இந்து தொடக்கப் பள்ளி செயலர் கே.அதிசயமேரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.சந்திரசேகரன், ஆசிரியை கஸ்தூரி ஆகியோர் நிர்வாகத்துக்கு எதிராக செயல்பட்டதால் பணி நீக்கப்பட்டனர். இதை எதிர்த்து சந்திரசேகரன் தாக்கல் செய்த மனுவை தொடக்கக் கல்வி இணை இயக்குநர் 14.7.2010-ல் தள்ளுபடி செய்தார். அவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவும் தள்ளுபடியானது.
இந்நிலையில் சந்திரசேகரன் தொடக்க கல்வி இணை இயக்குநரிடம் பணி நீக்கத்தை ரத்து செய்ய கோரி மீண்டும் மனு கொடுத்தார். அந்த மனுவை ஏற்ற இணை இயக்குநர், 14.7.2010-ல் பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்து 10.4.2015-ல் புதிய உத்தரவு பிறப்பித்தார். அவரது உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது நீதிபதி எஸ்.வைத்தியநாதன் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் 4-வது எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டிருந்த தலைமை ஆசிரியர் எஸ்.சந்திரசேகரன் நீதிபதி எஸ்.வைத்தியநாதனுக்கு ஜூலை 1-ல் கடிதம் ஒன்றை அனுப்பினார்.
‘கருணை மனு - கண்ணீர் மனு பட்டினிச்சாவு - குடும்பத்துடன் தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற தலைப்பில் சென்னை ஆவடியில் இருந்து சந்திரசேகரன் எழுதிய கடிதத்தில், கடந்த 6 ஆண்டுகளாக எந்த வருமானமும் இல்லாமல் பட்டினியால் இறந்து கொண்டிருக்கும் எனது குடும்பத்தைக் காப்பாற்ற உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு வேண்டுகிறேன் என அவர் கூறியிருந்தார். கடிதத்தின் அடியில் பட்டினியால் சாகும் குடும்பத்தின் தலைவன் என குறிப்பிட்டு கையெழுத்திட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பின் நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
தற்போது வழக்கு தொடர்பவர்கள், நீதிபதிகளுக்கு நேரடியாக கடிதம் எழுதுவது, தகவல் தெரிவிப்பது ஒரு வழக்கமாக மாறியுள்ளது. ஒரு வழக்கின் மனுதாரர் நேரடியாக கடிதம் எழுதியதால், அந்த வழக்கு வேறு நீதிபதியின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், எதிர்மனுதாரரான தலைமை ஆசிரியர் சந்திரசேகரன் 60 பக்க ஆவணங்களுடன் கடிதம் ஒன்றை நேரடியாக அனுப்பியுள்ளார்.
வழக்கறிஞர்கள், மனுதாரர்கள் தங்களது குறைகளை பதிவுத் துறையிடம் தெரிவிக்கலாம். நீதிபதிக்கு நேரடியாக கடிதம் அனுப்புவது ஏற்புடையதல்ல. எனவே, இந்த வழக்கை நிர்வாக நீதிபதியின் ஒப்புதல் பெற்று வேறு நீதிபதி விசாரணைக்கு பட்டியலிட பதிவுத் துறைக்கு உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு வழக்கு தொடர்ந்தவர்கள், எதிர்மனுதாரர்கள் சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு நேரடியாக கடிதம் எழுதும்போது சிலர் வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுகின்றனர். சிலர் அபராதம் விதிக்கின்றனர். இதுபோன்ற நிலை தொடர்ந்தால் வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிட முடியாத நிலை ஏற்படும் என உத்தரவில் கூறியுள்ளார்.