தமிழகம்

பருவமழை தொடங்கியதால் முடிவுக்கு வந்தது சீஸன்: தூத்துக்குடியில் 15 லட்சம் டன் உப்பு உற்பத்தி

செய்திப்பிரிவு

ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி

வடகிழக்கு பருவமழை தொடங்கி யதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான உப்பு சீஸன் முடிவுக்கு வந்துள் ளது. கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் 60 சதவீதம் அளவுக்கு தான் உப்பு உற்பத்தி நடைபெற் றுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தை யாபுரம், முள்ளக்காடு, ஆறுமுக நேரி பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந் துள்ளன. இவற்றில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் உள்ளது. இங்கு ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 6 மாதங்கள் உப்பு உற்பத்தி விறுவிறுப்படையும். அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் உப்பு சீஸன் முடிவடையும்.

நல்ல தொடக்கம்

இந்த ஆண்டு வழக்கம் போல் ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி பணிகள் தொடங்கின. மே, ஜூன், ஜூலை மாதங்களில் கடும் வெயில் மற்றும் பலத்த காற்று வீசியதால் உப்பு உற்பத்தி நன்றாக இருந்தது. இதனால் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி 90 சதவீதம் வரை எட்டும் என உற்பத்தியாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், கடந்த 6 வாரங்களாக அதாவது செப்டம்பர் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை இடையிடையே பெய்த மழை காரணமாக உப்பு உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டன.

சீஸன் முடிந்தது

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை யடுத்து கடந்த 15-ம் தேதி முதல் பலத்த மழை பெய்து வருவதால் இந்த ஆண்டுக்கான உப்பு சீஸன் முடிவுக்கு வந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள 20 ஆயிரம் ஏக்கர் உப்பளங் களும் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

இது குறித்து தூத்துக்குடி சிறிய உப்பு உற்பத்தியாளர் சங்க செயலாளர் ஏஆர்ஏஎஸ்.தனபாலன் கூறியதாவது: இந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் உப்பு உற்பத்தி நன்றாக இருந்தது. ஆனால், கடந்த 6 வாரங்களாக இடையிடையே பெய்த மழை காரணமாக உப்பு உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டது.

15 லட்சம் டன் உற்பத்தி

இதனால் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் 60 சதவீதம் அளவுக்கு தான் உப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதாவது மொத்தம் 15 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் இதுவரை 40 சதவீதம் அதாவது 10 லட்சம் டன் உப்பு விற்பனையாகி விட்டது. தற்போது 20 சதவீதம் அதாவது 5 லட்சம் டன் மட்டுமே உப்பளங்களில் இருப்பில் உள்ளது. வரும் ஜனவரி மாதம் வரை இது போதுமானதாக இருக்கும். ஜனவரி மாதம் புதிதாக உப்பு உற்பத்தி செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துவிடும். தற்போது உப்பு டன் ஒன்றுக்கு ரூ.1000 முதல் ரூ.1500 விலை போகிறது. இது நல்ல விலை தான் என்ற போதிலும் 60 சதவீதம் மட்டுமே உப்பு உற்பத்தி நடைபெற்றுள்ளதால் பெரிய அளவில் லாபம் கிடையாது என்றார் அவர்.

மழைக்கால நிவாரணம் வேண்டும்

சிஐடியு உப்புத் தொழிலாளர் சங்க செயலாளர் கே.சங்கரன் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பளங்களில் நேரடியாக 30 ஆயிரம் தொழிலாளர்கள், பண்டல் போடுதல் போன்ற சார்பு தொழில்களில் 20 ஆயிரம் பேர் என மொத்தம் 50 ஆயிரம் பேர் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களுக்கு வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களும் முழுமையாக வேலை இருக்காது. இதுபோல் செப்டம்பர் மாதத்தில் 15-ம் தேதிக்கு மேலும், ஜனவரி மாதத்தில் 15-ம் தேதி வரையும் பெரும்பாலும் வேலை இருக்காது. எனவே, இந்த காலத்தில் உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை. ஆளும் அதிமுகவும் தனது தேர்தல் அறிக்கையில் உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்குவோம் என தெரிவித்தது. ஆனால், இதுவரை வழங்கப்படவில்லை.

எனவே, உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ. 10 ஆயிரம் வழங்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT