தமிழகம்

கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 50 டன் மாம்பழம் பறிமுதல்: தமிழகம் முழுவதும் சோதனை நடத்த உத்தரவு

செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் மார்க்கெட் களில் நடத்தப்பட்ட சோதனை களில் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 50 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மார்க்கெட்களில் தொடர்ந்து சோதனை நடத்த அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் உணவு பாதுகாப்புத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் மாம்பழம் சீசன் தொடங்கிவிட்டது. மாங்காய்களை கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்து வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். இதன் விபரீதம் தெரியாமல் பொதுமக்களும் வாங்கிச் செல்கின்றனர்.

கார்பைடு கல் மூலம் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறைக்கு நிறைய புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மார்க்கெட்களில் சோதனை நடத்தி கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை பறிமுதல் செய்யுமாறு மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது.

50 டன் மாம்பழம் பறிமுதல்

அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள மார்க்கெட்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 50 டன்னுக்கும் அதிகமான மாம்பழங்களை பறிமுதல் செய்துள்ளனர். உணவு பாதுகாப்புத் துறை சென்னை மாவட்ட அதிகாரி எஸ்.லட்சுமி நாராயணன் தலைமையிலான குழுவினர் கடந்த 2 வாரங்களில் கோயம்பேடு, தி.நகர் மற்றும் கொத்தவால்சாவடி போன்ற மார்க்கெட்களில் சோதனை நடத்தி 4 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக அதிகாரி எஸ்.லட்சுமி நாராயணன் கூறியதாவது:

தமிழகத்தில் மாம்பழ சீசன் ஏப்ரல் முதல் ஜூன் வரை உள்ளது. ஆனால், மரங்களில் மாம்பழங்கள் இன்னும் சரியாக பழுக்கவில்லை. அதனால், வியாபாரிகள் மாங்காய்களை வாங்கி வந்து கார்பைடு கல் வைத்து பழுக்க வைத்து விற்கின்றனர். இதுபோல செய்யக்கூடாது என வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கி வருகிறோம்.

புற்றுநோய் பாதிப்பு

கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தின் மேல் நன்றாக பழுத்ததுபோல தோல் மஞ்சள் நிறமாக இருக்கும். ஆனால், உள்ளே பார்த்தால் செங்கனியாக இருக்கும். முகர்ந்தால் மாம் பழம் வாசனையாகவும், ருசியாக வும் இருக்காது. கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை சாப்பிட்டால் தோல் அலர்ஜி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்படும். அதிகமாக சாப்பிட் டால் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புள்ளது. இயற்கை முறையில் பழுக்கும் மாம்பழங் களை பொதுமக்கள் வாங்கி சாப்பிட வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT