சென்னை
விதிமீறல் பேனர் விழுந்து சுபஸ்ரீ மரணமடைந்த வழக்கில் ஜாமீன் கோரிய அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால், அவரது உறவினர் மேகநாதன் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் ஒத்திவைத்துள்ளது.
செப்டம்பர் 12-ல் சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான ‘விதிமீறல்’ பேனர் வைத்த விவகாரத்தில் பள்ளிக்கரணை காவல் நிலையமும், பரங்கிமலை போக்குவரத்து காவல்துறையும் வழக்குப் பதிவு செய்தன. அதில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால், அவரது உறவினர் மேகநாதன் ஆகிய இருவரும் தலைமறைவாகினர்.
தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு செப்டம்பர் 27-ம் தேதி அன்று அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் கிருஷ்ணகிரியில் சிக்கினார். அவரது உறவினர் மேகநாதன் இரண்டு நாட்களுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டு, செப்டம்பர் 28-ம் அன்று இருவரும் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.
இவர்களின் ஜாமீன் மனுக்களை செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் அக்டோபர் 4-ம் தேதி அன்று தள்ளுபடி செய்தது. பின்னர் இருவரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, அக்டோபர் 15-ல் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டது.
அதனை ஏற்று வழக்கை ஒத்திவைத்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், உங்கள் வீட்டு மகளை வரவேற்று விதிமீறல் பேனர் வைத்து, இன்னொரு வீட்டின் மகளைக் கொன்றுள்ளீர்கள் என ஜெயகோபால், மேகநாதன் தரப்புக்குக் கண்டனம் தெரிவித்தார்.
அந்த வழக்கு இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விதிமீறல் பேனர்கள் தொடர்பாக டிராஃபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், என்.சேஷசாயி அமர்வில் அக்டோபர் 23-ம் தேதி விசாரணைக்கு வருவதால், ஜாமீன் மனுவை அதன் பின்னர் விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.
விதிமீறல் பேனர் வழக்கிற்கும், ஜாமீன் வழக்கிற்கும் தொடர்பில்லை என்பதால் தங்கள் மனுக்களை விசாரிக்க வேண்டுமென ஜெயகோபால், மேகநாதன் தரப்பில் வாதிடப்பட்டது. பின்னர் காவல்துறை தரப்பு கோரிக்கையை ஏற்ற நீதிபதி வழக்கை அக்டோபர் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.