மதுரை
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை பழிவாங்காமல் இந்தியாவின் பொருளாதரத்தை மேம்படுத்தும் வகையில் அவரிடம் ஆலோசனையைப் பெறலாம் என ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி கூறியுள்ளார்.
மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், " முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் மீது அமலாக்கத் துறை நடவடிக்கை பழிவாங்கும் செயல்பாடு. சிதம்பரம் மீது தொடர்ச்சியாக பழி வாங்கும் நோக்கத்தில் மத்திய அரசு செயல்படுகிறது. ஆனால் அவற்றை முறியடித்து விரைவில் அவர் சட்டப்படி வெளியே வருவார்.
கர்நாடக முன்னாள் அமைச்சரும், காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவருமான டி.கே.சிவகுமார், கார்த்திக் சிதம்பரம் போன்றவர்கள் மீது தொடரும் நடவடிக்கையும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைதான். காங்கிரஸ்காரர்களை குறிவைத்தே இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மத்திய அரசு இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கையை விடுத்து, ப.சிதம்பரத்திடம் பொருளாதார ஆலோசனைகளைக் கேட்கலாம். அதன்மூலம் பொருளாதார முன்னேற்ற வழியை மேற்கொண்டு வியாபாரத்தைப் பெருக்கி வேலைவாய்பைப் பெருக நடவடிக்கை எடுக்கலாம்.
இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டியில் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் அமோக வெற்றி பெறுவார்கள்" என்றார்.