நாகர்கோவில்
ராஜீவ் படுகொலையை நியாயப்படுத்திப் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ள நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருக்கிறார் தமிழக கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன்.
நாகர்கோவிலில் இன்று (செப்.17) செய்தியாளர்களை சந்தித்த அவர், "சீமான், வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுகிற மனிதர். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை தொடர்பாக சீமான் பேசியது குறித்து உரிய சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
சசிகலா மீண்டும் அதிமுகவில் இணைவார் என்று நிலவும் தகவல் தொடர்பான கேள்விக்கு, "சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது குறித்து அவர் சிறையிலிருந்து வெளிவந்தபிறகு பேசிக்கொள்வோம்" என மையமாகக் கருத்து கூறிச் சென்றார்.
முன்னதாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய சீமான், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலையை ஆதரித்துப் பேசியிருந்தார். அவர் மீது போலீஸார் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியிருக்கிறார்.
கட்சி பேதங்களின்று அனைத்து கட்சித் தலைவர்களுமே சீமானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.