ஈரோடு
ஈரோட்டில் சுகாதாரமற்ற சூழலில் செயல்பட்ட உணவு தயாரிக்கும் மையத்திற்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் உத்தரவிட்டார்.
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட மூலப்பாளையம், எல்ஐசி நகர், நேதாஜி நகர், தீரன் சின்னமலை வீதி உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் டெங்கு தடுப்புப் பணிக்கான ஆய்வினை நேற்று (அக்.16) மேற்கொண்டனர். இப்பகுதியில் உள்ள வீடு, கடை, வணிக நிறுவனங்களில் சுகாதாரச் சீர்கேடு மற்றும் டெங்கு கொசு உற்பத்தியாகக்கூடிய சூழல் உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தினர்.
இதில், தனசங்கர் என்பவருக்குச் சொந்தமான உணவு தயாரிக்கும் மையம் சுகாதாரமற்ற முறையில் செயல்படுவதும், டெங்கு கொசு உருவாகும் சூழல் உள்ளதும் தெரியவந்தது. இந்த உணவு மையத்தில் பிரியாணி தயார் செய்யப்பட்டு, நகரின் பல்வேறு உணவகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதும் ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து உணவு தயாரிக்கும் மையத்தை சுகாதாரமாகப் பராமரிக்காததற்காக ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க ஆட்சியர் சி.கதிரவன் உத்தரவிட்டார்.
இதேபோல் அப்பகுதியில் உள்ள சில வீடுகளில் டெங்கு கொசு உற்பத்தியாகும் சூழல் இருந்ததால், அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. மூன்று வீடுகளில் அதிகாரிகள் ஆய்வு செய்ய அனுமதிக்கவில்லை. இந்த வீடுகளுக்கு குடிநீர் இணைப்பைத் துண்டிக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதுகுறித்து ஆட்சியர் சி.கதிரவன் கூறும்போது, "ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டெங்கு கொசு உற்பத்தியாவதைத் தடுக்கும் வகையில், வீடு, தொழிலகம், கடைகள் என அனைத்துப் பகுதிகளிலும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். டெங்கு கொசு ஒழிப்புப் பணிக்காக ஆய்வுக்கு வரும் அலுவலர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அவ்வாறு ஒத்துழைப்பு அளிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
கோவிந்தராஜ்