லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு, போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடுகளுக்கு ஆட் களை அனுப்பி வைக்கும் கும்பலை கைது செய்ய திருச்சி போலீஸார் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.
இலங்கை யாழ்ப்பாணம் கொடிகாமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் பிள்ளை மகன் குமரகுரு(40). விடுதலைப்புலிகள் இயக்கத்தில் 1992 முதல் 1997 வரை கள வீரராக பணியாற்றிய இவர், 21.1.2014-ல் சுற்றுலா விசாவில் சென்னைக்கு வந்தார். காலம் முடிந்தும் அவர் இலங்கைக்கு திரும்பிச் செல்லவில்லை.
இந்நிலையில் திருச்சியிலிருந்து மலேசியா வழியாக சுவிட்சர்லாந்து தப்பிச் செல்வதற்காக கடந்த 25-ம் தேதி திருச்சி வந்தார். 26-ம் தேதி காலை மலேசியா செல்லும் தனியார் விமானத்துக்கு பயணச்சீட்டு பெற்றிருந்த இவரை, அதற்கு முன்னதாக திருச்சி விமானநிலைய போலீஸார் கைது செய்தனர். இவர் வெளிநாடு தப்புவதற்கு உதவிய ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகிலுள்ள உப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன்(37) என்பவரையும் கைது செய்தனர்.
இதையடுத்து இவ்வழக்கின் பின்னணி குறித்து விசாரிக்க கன்டோன்மென்ட் இன்ஸ்பெக்டர் உமாசங்கர், விமான நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ் உள்ளிட் டோரைக் கொண்ட தனிப்படையை அமைத்து மாநகர காவல் ஆணையர் சஞ்சய் மாத்தூர் உத்தரவிட்டார். அவர்கள் நடத்திய விசாரணையில், குமரகுரு போலி பாஸ்போர்ட் பெற சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த டிராவல் ஏஜென்ட் முபாரக் அலி(43) என்பவர் ஏற்பாடு செய்ததாக தெரியவந்தது. இதையடுத்து குமரகுருவுடன் மலேசியா செல்வதற்காக திருச்சி விமானநிலையத்துக்கு வந்திருந்த முபாரக் அலியையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கிடைத்த சில முக்கிய தகவல்களின் அடிப்படை யில் தனிப்படை போலீஸார் முபாரக் அலியை அழைத்துக் கொண்டு சென்னை சென்று நேற்று விசாரணை நடத்தினர். அப்போது மயிலாப்பூர் கச்சேரி சாலையிலுள்ள முபாரக் அலியின் வீடு, பாரிஸ் கார்னர் அருகே யுள்ள கார்கோ கொரியர் அலுவல கம் போன்றவற்றில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்டவரை போலி பாஸ்போர்ட் மூலம், அவர் விரும்பும் நாட்டுக்கு அனுப்பி வைக்கும் கும்பல் சென்னையி லிருந்து செயல்படுவதாக தெரிய வந்தது. அக்கும்பல் குறித்து தனிப் படையினர் விசாரித்து வருகின்ற னர்.
இதுபற்றி போலீஸார் கூறும் போது, “முபாரக் அலியின் பரிந் துரையின்பேரில் குமரகுருவுக்கு சென்னையைச் சேர்ந்த அன்சாரி என்பவர்தான் போலி பாஸ்போர்ட் தயாரித்துக் கொடுத்துள்ளார். அன்சாரியின் பின்னணியில் “பெரிய நெட்வொர்க்” இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இலங் கையைச் சேர்ந்த பலருக்கு, இதுபோல போலி பாஸ்போர்ட் டுகளை தயாரித்துக் கொடுத்து, வெளிநாடுகளுக்கு அனுப்பியிருக் கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அதுபற்றி விசாரித்து வருகிறோம். அன்சாரி சிக்கினால்தான் முழு விவரமும் தெரியவரும்” என்றனர்.