புதுச்சேரி
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலையொட்டி காங்கி ரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து முதல்வர் நாராயணசாமி வீடு வீடாகச் சென்று நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப் போது செய்தியாளர்களுக்கு பேட்டி யளித்த அவர், "தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் புதுச் சேரி வந்தார். ஆனால் அவர் புதுச் சேரி இடைத்தேர்தலில் என்.ஆர். காங்கிரஸுக்கு பிரச்சாரம் செய்ய வில்லை. இதன் மூலம் என்.ஆர்.காங்கிரஸை அதிமுக புறக்க ணிக்கிறதா என கேள்வி எழுகிறது.
ஜெயலலிதா, ரங்கசாமியுடன் கடந்த 2011ல் கூட்டணி அமைத்தார். தேர்தலில் வென்றதும் ரங்கசாமி, அதிமுகவை புறக்கணித்து ஆட்சி அமைத்தார்.
அப்போது ஜெயலலிதா ரங்க சாமியை கடுமையாக விமர்சித்தார். தற்போது முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியபடி ஓபிஎஸ் செயல்பட் டுள்ளார் எனத் தெரிகிறது. ரங்கசாமி தனித்து விடப்பட்டுள்ளார்" என்று குறிப் பிட்டார்.
காங்கிரஸூக்கு அதிமுக பதில்
இதனிடையே, காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியி டும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனை ஆதரித்து நேற்று சங்கரதாஸ் நகர், தேவகி நகர் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக சட்டமன்ற தலை வர் அன்பழகன் எம்.எல்.ஏ. செய்தி யாளர்களிடம் கூறியது:
தமிழக முதல்வர் பழனிச்சாமி யும், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும் இணைந்து தான் அதிமுக கூட்டணியில் புதுச்சேரி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கி ரஸ் போட்டியிடும் என்று அறிவித் தனர். தொகுதி ஒதுக்கீட்டையும் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியிடம் ஒப்படைத்தனர். இது கூட தெரியாமல் என்.ஆர்.காங் கிரஸ் கூட்டணியில் அதிமுக இருக் கிறதா என முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்புகிறார்.
காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பா ளரை ஆதரித்து சோனியா, ராகுல், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஆகி யோர் பிரச்சாரத்துக்கு வரவில்லை.
இவர்களே வராத நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினை ஏன் அழைத்து வருகிறார்கள்? புதுச்சேரி காங்கிரஸ் திமுகவின் கிளைக்கழகம் போல் மாறியுள்ளது. இங்குள்ள காங்கிரஸ் கட்சிக்கு பதில் சொல்ல புதுச்சேரியில் உள்ள தலைவர்களே போதுமானவர்கள். தமிழக தலைவர்கள் வந்து பதில் சொல்லக்கூடிய அளவிற்கு அள வுக்கு புதுச்சேரி காங்கிரஸில் பெரிய தலைவர்கள் யாருமில்லை என்று குறிப்பிட்டார்.
என்ன நடந்தது? - ரங்கசாமி பதில்
இவ்விவகாரத்தில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய தமிழக துணை முதல் வர் ஓ.பன்னீர்செல்வம் வந்தார். அப்போது தங்குவதற்காக அவர் புதுச்சேரி வந்தார். அவரை என்.ஆர்.காங்கிரஸ் தலைவர்களும், புதுச்சேரி அதிமுக தலைவர்களும் சென்று பார்த்தோம். அப்போது, தான் மறுபடியும் விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரத்திற்கு வர இருப்பதாகவும் அப்போது புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலிலும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்வதாகவும் உறுதியளித்து விட்டுச் சென்றுள்ளார்.புதுச்சேரி அதிமுக சட்டமன்றத் தலைவர் அன்பழகன், மாநில செயலாளர் புருஷோத்தமன் மற்றும் தலைவர்கள் நாள்தோறும் என்.ஆர்.காங்கிரஸூடன் பிரச்சாரத்திற்கு வந்து வாக்கு கேட்கின்றனர். அவர்கள் அதிமுக தலைவர்கள் இல்லையா?
காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து டெல்லி மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் வந்து பிரச்சாரம் செய்கின்றார்களா? என்று கேள்வி எழுப்பினார்.