தமிழகம்

தாமதமாகும் தமிழக பாஜக தலைவர் நியமனம்: தீபாவளிக்கு முன்பாக தேர்ந்தெடுக்க தீவிர ஆலோசனை

செய்திப்பிரிவு

சென்னை

தமிழக பாஜக தலைவரை தேர்வு செய்வது குறித்து அக்கட்சியின் மேலிடத் தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2014 ஆகஸ்ட் 16-ல் தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டார். 5 ஆண்டுகளுக்குமேல் அப்பதவியில் இருந்த அவர், கடந்த செப்டம்பர் 1-ம் தேதி தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் பதவியை தமிழிசை ராஜினாமா செய்தார். இதையடுத்து, புதிய தலைவர் ஓரிரு நாளில் அறிவிக்கப்படுவார் என்று தமிழக பாஜக பொறுப்பாளரான தேசிய பொதுச்செயலாளர் பி.முரளிதர ராவ் தெரிவித்திருந்தார். ஆனால், தமிழிசை பதவி விலகி ஒன்றரை மாதங்களாகியும் இதுவரை புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை.

பாஜக கட்சி விதிகளின்படி கிளை கமிட்டி முதல் தேசியத் தலைவர் வரையிலான தலைவர் பதவிகள் 3 ஆண்டுகள் கால அளவைக் கொண்டது. ஒருவர் தொடர்ந்து இரு முறை, அதாவது 6 ஆண்டுகள் தலைவர் பதவி வகிக்க முடியும். அதன்பிறகு தலைவர் பதவியில் தொடர முடியாது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் உட்கட்சி தேர்தல்களின் மூலமே தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

நாடு முழுவதும் வரும் நவம்பர், டிசம்பரில் பாஜக உட்கட்சி தேர்தல்கள் நடக்கவுள்ளன. டிசம்பர் இறுதியில் தேசியத் தலைவர் தேர்தல் நடக்க இருப்பதால் அதற்கு முன்பாகவே மாநிலத் தலைவர் தேர்தலை நடத்தியாக வேண்டும். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்தச் சூழலில் தமிழிசை ஆளுநராக நியமிக்கப்பட்டதால் தமிழகத்துக்கு புதிய தலைவரை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன்பிறகு ராஜஸ்தான் போன்ற சில மாநிலங்களுக்கு மாநிலத் தலைவர் நியமிக்கப்பட்டாலும் தமிழகத்துக்கு மட்டும் நியமிக்கப்படவில்லை.

தமிழகத்தில் பாஜக வலுவாக இல்லாவிட்டாலும் கோஷ்டி பூசல் வலுவாக உள்ளது. கடந்த 2014 -ல் பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சரானதும் மாநிலத் தலைவர் பதவிக்கு எச்.ராஜா தீவிரமாக முயற்சி மேற்கொண்டார். ஆனால், பொன்.ராதாகிருஷ்ணன், அப்போதைய மாநில பொதுச்செயலாளர் எஸ்.மோகன்ராஜூலு ஆகியோரின் எதிர்ப்பால் எச்.ராஜாவுக்கு பதிலாக தமிழிசை தலைவரானார்.

தற்போது மாநிலத் தலைவர் பதவிக்கு பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், தேசியச் செயலாளர் எச்.ராஜா, இளைஞரணி தேசிய துணைத் தலைவர் ஏ.பி.முருகானந்தம், மாநில பொதுச்செயலாளர்கள் வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், மாநில துணைத் தலைவர்கள் நயினார் நாகேந்திரன், டி.குப்புராமு, மாநிலச் செயலாளர்கள் கே.டி.ராகவன், ஆர்.சீனிவாசன், மாநில செய்தித் தொடர்பாளர் கனகசபாபதி என்று 10-க்கும் அதிகமானோர் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்காக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா, தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், தேசிய பொதுச்செயலாளர் பி.முரளிதர ராவ், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகன் உள்ளிட்டோரையும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளையும் சந்தித்து அவர்கள் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இதுதொடர்பாக பாஜக முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது பல்வேறு தகவல்கள் கிடைத்தன. ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் ஒருவர், ‘‘தமிழிசை ஆளுநராக்கப்பட்டதால் தனக்கு முக்கியப் பொறுப்பை பொன்.ராதாகிருஷ்ணன் எதிர்பார்க்கிறார். ஆனால் அவர் ஏற்கெனவே நான்கரை ஆண்டுகள் தலைவராக இருந்துவிட்டதால் மேலிடம் தயங்குகிறது.

தமிழகத்தின் சமூக, அரசியல் சூழல் நாட்டின் மற்ற மாநிலங்களில் இருந்து மாறுபட்டு இருப்பதால் எச்.ராஜா, கே.டி.ராகவன் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைப் பதில் சிக்கல் உள்ளது. மேலிடம் யாரை முன்மொழிந்தாலும் அவரை தமிழக தலைவர்கள் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி எதிர்க்கின் றனர். இதனால்தான் புதிய தலைவர் நியமனம் தாமதமகிறது’’ என்றார்.

கோவையைச் சேர்ந்த ஏ.பி.முருகானந்தம், மத்திய நிதித் துறை இணை அமைச்சர் அனுராக் தாகூருக்கு நெருக்கமானவர். தற்போது தேசிய இளைஞரணி துணைத் தலைவராக இருக்கிறார். இந்தி மொழியில் சரளமாக உரையாடும் இவர், மேலிடத் தலைவர்கள் பலருடன் நெருங்கி பழகி வருகிறார். தற்போது முக்கியப் பொறுப்பில் இருக்கும் முன்னாள் மாநிலத் தலைவரின் ஆதரவும் இவருக்கு இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் மோடி, அமித் ஷாவை சந்தித்த அந்த முன்னாள் தலைவர், தமிழக தலைவர் பதவிக்கு முருகானந்தம் பெயரை பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.

தீபாவளிக்கு முன்பாக தமிழக பாஜக தலைவரை அறிவிக்க அமித் ஷா முடிவு செய்துள்ளதாகவும் எனவே, விரைவில் பாஜக தலைவர் அறிவிப்பு வெளியாகும் என்றும் அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT