தமிழகம்

அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் சீருந்து இணைப்பு சேவை விரைவில் தொடங்கப்படும்: மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு 

செய்திப்பிரிவு

சென்னை

சீருந்து இணைப்பு வசதி மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளதால், அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இந்த சேவைவிரைவில் தொடங்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னையில் 2 தடத்தில் 45 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் எண் ணிக்கையை அதிகரிக்க எழும்பூர், வடபழனி, கிண்டி உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து குடியிருப்பு பகுதிகளை இணைக்கும் வகையில் ஷேர் ஆட்டோ, டாக்ஸிகள் இயக்கப் பட்டு வருகின்றன. இந்த வாகனங் களில் கடந்த செப்டம்பர் மாதம் வரை 5 லட்சத்து 34 ஆயிரத்து 869 பேர் பயணம் செய்துள்ளனர்.

இதையடுத்து, பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து 6 முதல் 8 கி.மீ தொலைவு வரை செல்லக்கூடிய சீருந்து சேவை தொடங்கப்பட்டது. இதில் நபருக்கு ரூ.10 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சேவை தற்போது, அரும்பாக்கம், நேரு பூங்கா, சைதாப்பேட்டை, கீழ்பாக் கம், அண்ணாநகர் டவர் மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ளது.

இதற்கிடையே, சீருந்து சேவை மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளதால், அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இந்த சேவை விரைவில் கொண்டு வரப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

SCROLL FOR NEXT