தமிழகம்

36 ஆண்டுகளுக்குப் பின் யாழ்ப்பாண விமான நிலையம் நாளை  திறப்பு: தமிழகத்திலிருந்து விமானங்கள் இயக்கம்

செய்திப்பிரிவு

ராமேசுவரம்

36 ஆண்டுகளுக்குப் பின் இலங்கையில் உள்ள யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் நாளை (வியாழக்கிழமை) திறக்கப்பட்டு தமிழகத்திலிருந்து விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பலாலியில் இரண்டாம் உலகப் போரின்போது 1940-ம் ஆண்டில் ஆங்கிலேயர்களின் வான்படைத் தேவைக்காக விமானதளம் அமைக்கப்பட்டது. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் சென்னை விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் பலாலி வழியாக கொழும்புவிற்கு விமானப் போக்குவரத்து நடைபெற்றது.

1983-ம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டு யுத்தம் தொடங்கியபோது யாழ்ப்பாணம் பலாலிக்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.
2009-ல் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர் பலாலி விமானத்தளத்தை இந்தியாவின் நிதியுதவியுடன் விமான நிலையமாக புனரமைப்பதற்காக அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

ஆனால், யாழ்ப்பாணத்திலுள்ள பலாலியில் புலம்பெயர்ந்தவர்களை மீண்டும் மீள்குடியேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டங்கள் நடைபெற்று வந்தால் விமானதளத்தை புனரமைக்கும் பணிகள் தாமதப்பட்டு வந்தன.

தொடர்ந்து 2018-ம் ஆண்டடிலிருந்து பலாலியை சுற்றிய ஆக்கிரமிப்பு நிலங்களை புலம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றம் செய்ய ராணுவம் விடுவிக்கத் தொடங்கியது. இதனையடுத்து கடந்த 06.07.2019 அன்று பலாலி விமான நிலையத்தின் புனரமைப்புப் பணிகளை இலங்கையின் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார். மேலும் பலாலி விமானதளம் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமாக பெயர் மாற்றமும் செய்யப்பட்டது.

யாழ்ப்பாண விமான நிலையப் பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் விமான நிலையத்தினை அதிபர் மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் நாளை (வியாழக்கிழமை) திறந்து வைக்கவுள்ளனர்.

முன்னதாக, இந்திய தொழில் நுட்ப அதிபாரிகள் குழுவினரைக் கொண்ட இந்தியாவின் அலையன்ஸ் ஏர் விமானம் சென்னையிலிருந்து புறப்பட்டு யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் செவ்வாய்கிழமை சோதனை ஓட்டமாக தரையிறங்கியுள்ளது. இந்திய தொழில் நுட்ப அதிகாரிகள் புதன்கிழமை விமான ஓடுபாதை பரிசோதனை மற்றும் கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் விமான நிலையத்தின் செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்தனர்.

இதனையடுத்து, முதற்கட்டமாக மதுரை, திருச்சி, சென்னை, திருவனந்தபுரம், மும்பை, டெல்லி ஆகிய விமான நிலையங்களிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமானச் சேவைகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிகிறது.

குறைந்த நேரத்தில் பயணம்..

தமிழகத்திலிருந்து இலங்கையின் வடக்கு நகரமான யாழ்ப்பாணத்திற்கு செல்ல வேண்டுமானாலும் தலைநகர் கொழும்புவுக்கு விமானம் மூலம் சென்று பின்னர் யாழ்பாணத்திற்கு 400 கி.மீ தூரத்தை சாலை வழியாக பயணித்தால் சுமார் எட்டு மணி நேரமும், ரயில் வழியாக சென்றால் 7 மணி நேரமும் ஆகும்.

தற்போது சென்னை, மதுரையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமானங்கள் இயக்க இருப்பதால் விரைவில் சென்றடைந்திட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ். முஹம்மது ராஃபி

SCROLL FOR NEXT