தமிழகம்

ஜெ. மறைவில் உள்ள மர்மங்களை விசாரிப்போம்: நாங்குநேரியில் ஸ்டாலின் பிரச்சாரம்

அ.அருள்தாசன்

பருத்திப்பாடு

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தின் மர்மம் குறித்து விசாரிக்கும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் வருகிற 21-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் காங்கிரசுக்கும் அதிமுகவிற்கும் நேரடி போட்டி நிலவி வந்தாலும் 23 பேர் போட்டியிடுகின்றனர். இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் முகாமிட்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் இரண்டாம் கட்ட பிரச்சாரத்தின் இரண்டாவது நாளான இன்று அம்பலம் மற்றும் பருத்திப்பாடு ஆகிய பகுதிகளில் திண்ணை பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர், "ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். நாங்கள் ஆட்சி அமைத்த உடன் ஜெயலலிதாவின் மறைவில் உள்ள மர்மங்கள் பற்றி விசாரணை நடத்தப்படும்.

மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் சாலை வசதி வாறுகால் வசதி உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் இருந்தாலேபோதும். எனவே திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சித் தேர்தல் உடனடியாக நடத்தப்படும்.

ஆளும் அரசு மக்களை சந்திக்காததினால்தான் நாங்கள் உங்களை சந்தித்து மனுக்களை பெற்று வருகிறோம். உங்களுக்காக நாங்கள் எதுவும் செய்யத் தயாராக உள்ளோம். மக்களிடம் இவ்வாறு மனுக்கள் பெற்று அவர்களின் குறைகள் அறிந்து தான் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டது.
தேர்தல் அறிக்கையில் நாங்கள் என்ன கூறினமோ அதனை கண்டிப்பாக ஆட்சிக்கு வந்தவுடன் செய்வோம்.

எடப்பாடி, முதல்வரானதே ஒரு விபத்து. ஆனால் தன்னை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் என பொய் பிரச்சாரம் செய்கிறார். ஜெயலலிதா ,அண்ணா, காமராஜ் ,எம்ஜிஆர், கலைஞர் போன்றோர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்கள். எடப்பாடி சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் பதவி பெற்றவர். இப்போது பாஜகவின் காலில் விழுந்து கொண்டிருக்கிறார். இவர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் இருப்பதினால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இவர்களெல்லாம் சிறைச்சாலைக்கு போக வேண்டியவர்கள். கொள்ளையடிக்கும் கூட்டம் தான் ஆட்சி நடத்துகிறது. சிந்தித்து இந்த ஆட்சியை அகற்ற வேண்டும்" எனப் பேசினார்.

தொடர்ந்து, இன்று மாலை மருதகுளம் மற்றும் ரெட்டியார்பட்டி ஆகிய பகுதிகளில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்யவுள்ளார்.

அதேபோல், அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், உள்ளிட்டோரும் இன்று நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்யவுள்ளனர்.

SCROLL FOR NEXT