சென்னை
சென்னையின் அனைத்து மழைநீர் வடிகால்களை 18-ம் தேதிக்குள் தூர்வாரி முடிக்கவேண்டும், பருவ மழைக்காலத்தில் வார்டுக்கு 4 பேரை அமர்த்தி மழைநீர் வடிகால்களைப் பராமரிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பருவமழையை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் குறித்து பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடனான ஆய்வுக்கூட்டம் ஆணையாளர் கோ.பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் குறித்து பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடனான ஆய்வுக்கூட்டம் ஆணையர் கோ.பிரகாஷ், தலைமையில் நேற்று 15.10.2019 அம்மா மாளிகை கூட்டரங்கில் நடைபெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 1,636 கிலோ மீட்டர் நீளமுள்ள 7,365 மழைநீர் வடிகால்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள், 3,598 இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறு பராமரிப்பு பணிகள் மற்றும் 10,346 மனித நுழைவு வாயில்கள் சரிசெய்யும் பணிகள் குறித்து இக்கூட்டத்தில் ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.
பருவமழைக் காலத்திற்கு முன்பாக மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள், சிறு பராமரிப்பு மற்றும் மனித நுழைவு வாயில் சரி செய்தல் போன்ற பணிகளுக்காக ரூ.35 கோடி திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, நிர்வாக அனுமதியினை சம்பந்தப்பட்ட மண்டல அளவில் மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
மழைநீர் வடிகால்வாய்களிலிருந்து சுமார் 3,22,809m3 வண்டல்கள் தூர்வாரப்படும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் தற்பொழுது வரை 98,000m3 அளவிலான வண்டல்கள் தூர்வாரப்பட்டு உள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மீதமுள்ள தூர்வாரும் பணிகளை வருகின்ற வெள்ளிக்கிழமை அதாவது 18.10.2019க்குள் முடிக்க வேண்டுமென ஆணையர் இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பொறியாளர்களுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கும் உத்தரவிட்டார்.
தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்களை புகைப்படம் எடுத்து சம்பந்தப்பட்ட உயர் அலுவலர்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். தூர்வாரப்பட்ட கழிவுகளை கொடுங்கையூர் வளாகத்தில் இதற்கென தனியாக குறிப்பிடப்பட்ட பகுதிகளில் உடனடியாக கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பருவமழைக் காலங்களில் ஒப்பந்ததாரர்கள் ஒவ்வொரு வார்டுக்கும் தலா 4 முதல் 5 தொழிலாளர்களை உதவி செயற்பொறியாளர்களுக்கு பணிபுரிய ஏதுவாக வழங்கிட வேண்டும் எனவும், அதேபோன்று மனித நுழைவு வாயில்களில் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தும்போது அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தையும் தவறாமல் வழங்க வேண்டும். தவறும் ஒப்பந்ததாரர்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்கவும் மண்டலப் பொறியாளர்களுக்கு ஆணையர் கோ.பிரகாஷ், உத்தரவிட்டுள்ளார்.
இக்கூட்டத்தில், துணை ஆணையர் (பணிகள்) எம்.கோவிந்த ராவ், வட்டார துணை ஆணையர்கள் முதன்மை தலைமைப் பொறியாளர் , தலைமை பொறியாளர், மண்டல செயற்பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்”.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.