தமிழகத்தில் மின் மயானங்கள் வருகையால் மாற்று வேலைவாய்ப்பு இல்லாமல் வெட்டியான்கள் வருமானம் இல்லாமல், இறந்து வருகின்றனர். அதனால் இவர்கள் சமூகத்தில் கணவரை இழந்தவர்கள், திருமண வயதைக் கடந்த பெண்கள் அதிகளவில் உள்ளனர்.
'வெட்டி வேலையில்லை, வெட்டியான் வேலை' என்பார்கள். உறவினர்கள்கூட இறந்தவர்களின் உடல்கள் பக்கம் செல்ல தயக்கம் காட்டுவார்கள். ஆனால் வெட்டியான்கள் கடமையாக நினைத்து, இறந்தவர்களின் உடலை எரிக்கும், புதைக்கும் தொழிலில் வாழையடி வாழையாக ஈடுபட்டுள்ளனர்.
இயல்பான நிலையில் இந்த வேலையை செய்ய முடியாது என்பதால், இவர்கள் தன்னிலையை மறக்க மது அருந்துகின்றனர்.
இந்த தொழிலில் நிரந்தர வருவாய் கிடைக்காததால் இவர்கள் சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். தற்போது, மின்மயானங்கள் வருகையால் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் வருமானத்துக்கு மாற்று வேலைவாய்ப்பு இல்லாமல் வெட்டியான்கள் நலிவடைந்துள்ளனர்.
குறிப்பாக திண்டுக்கல் மாநகராட்சியில் மருதானிகுளம், ஒற்றைக்கண் பாலம், கழுதை ரோடு சுடுகாடு, ராஜாகுளம் உட்பட 10-க்கும் மேற்பட்ட மயானங்கள் உள்ளன. இவற்றில் ஆரம்பத்தில் திண்டுக்கல் குமரன் தெருவை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் வெட்டியான் பணியில் ஈடுபட்டனர். தற்போது பெரிய சின்னனையா (65), மொட்டையாண்டி (60), கருப்பையா (67), தீபாவளி கணேசன் (30) உள்ளிட்ட 10 பேர் மட்டுமே வெட்டியான் பணிகளைச் செய்கின்றனர். இந்த மயானங்களிலும் மின்மயானங்கள் வருகையால் இவர்களும் வேலையில்லாமல் தவிக்கின்றனர்.
இதுகுறித்து வெட்டியான் பெரிய சின்னையா (65) கூறியது: ஒரு பிரேதத்தை புதைக்கவும் எரிக்கவும் சென்றால் ரூ.2 ஆயிரம் கொடுப்பார்கள். அந்த பணத்தை நாங்கள் பத்து குடும்பத்துக்காரங்களும் பிரித்துக் கொள்வோம். மின்மயானத்தில் 1,060 ரூபாய்க்கு ஆம்புலன்ஸில் பிரேதத்தை எடுத்துச் சென்று எரித்து கொடுத்துவிடுகின்றனர். அதனால், எங்களை பெரும்பாலும் இப்போது பிரேதத்தை எரிக்க அழைப்பதில்லை. ஆண்டுக்கொரு முறை மின்மயானங்களை பழுதுபார்க்க நிறுத்தும்போதும், சுத்தம் செய்ய நிறுத்தும்போதும் வேலை கிடைக்கிறது. வெட்டியான் வேலை தவிர மற்ற எந்த வேலையும் எங்களுக்குத் தெரியாது. மற்ற வேலைகளும் எங்களுக்கு யாரும் கொடுக்கத் தயாரில்லை. மின் மயானம் வந்தபோது அங்கு வேலை கொடுப்பார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால், மின் மயானத்தில் வெட்டியான் இல்லாதவர்களுக்குத்தான் வேலை கொடுத்துள்ளனர். இப்போது பிழைப்பு இல்லாமல் சுருட்டு சுற்றுதல், அட்டை, காகிதங்களை பொறுக்கி பிழைக்கிறோம்.
வெட்டியான் வேலை செய்வதால் சமூகத்தில் எங்களுக்கு மரியாதையே இல்லை. எந்த நல்ல காரியத்துக்கும் எங்களை அழைப்பதில்லை. அதனால் ஊருக்கு நடுவிலே தனித்தீவில் வசிப்பதுபோல் புறக்கணிக்கப்பட்ட இனமாகவே வாழ்கிறோம். குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா இல்லை என்றார்.
செய்கிற தொழிலாலே மரணம்
வெட்டியான்களை பற்றி ஆய்வு செய்யும் காந்திகிராமம் பல்கலைக்கழக சமூக விலக்கல் மற்றும் உட்கொணர்வு கொள்கை ஆய்வு மைய உதவிப் பேராசிரியர் சாம் வெள்ளத்துரை கூறியதாவது: வெட்டியான் தொழிலானது சமூகத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் மீது திணிக்கப்பட்ட தொழில். இவர்களுக்கு செய்கிற தொழிலை தவிர வருமானம் தரக்கூடிய வாழ்வாதாரம் எதுவும் இல்லை. வீடு, நிலம் இருக்காது. வெட்டியான் தொழிலை நம்பியே அவர்கள் வாழ்வாதாரம் அமைந்துள்ளது. இவர்களுக்கு மாற்றுத்தொழில் ஏற்படுத்தி கொடுக்க தனி நலவாரியம் அமைக்க வேண்டும்.
வெட்டியான்கள் மக்கள்தொகை மிகவும் குறைவாக இருப்பதாலும், இவர்களிடையே சங்கம், ஒருங்கிணைப்பு இல்லாததால் இவர்களுக்கான உரிமை கிடைக்கவில்லை. அதனால், அவர்கள் கவனிக்கப்படாதவர்களாக உள்ளனர்.
வெட்டியான்கள் ஒழுங்காக சாப்பிடுவது, குளிப்பது கிடையாது. எரிகிற உடலில் இருந்து வெளியேறும் நச்சுப்புகை, விஷம் குடித்தவர்கள், நாய்க்கடிபட்டவர்கள், கிணற்றில் விழுந்து இறந்தவர்கள் உடல்களை மயானங்களில் எரிப்பதால் இவர்களுக்கு செய்கிற தொழில் மூலமே நுரையீரல் பாதிப்பு, காசநோய், சிறுநீரகக் கோளாறு, பார்வை கோளாறு, ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவுகின்றன. இவர்கள் உடல்நலன் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற பணமில்லாமல் குடித்து, குடித்து இறந்துவிடுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் திண்டுக்கல்லில் மட்டும் நாகராஜன் (60), சின்னக்காளை (55), சங்கலிங்கம் (40), முருகன் (50), அய்யாவு (60), துத்திக்காரை மதுரை (60), ஜீவா (35), குழந்தை (45) உள்ளிட்ட 40 ஆண், பெண் வெட்டியான்கள் இறந்துள்ளனர். கணவர்கள் இறந்ததால் இப்பகுதியை சேர்ந்த பெண்கள் பலர் விதவைகளாகவே வாழ்நாளை கழித்துவருகின்றனர்.
தந்தை, சகோதரர் இறந்ததால் மருதம்மாள் (38), பாப்பாத்தி (33), கனகவள்ளி (32), சின்னசாமி மகள் விக்டோரியா (50) உள்ளிட்ட பலர் திருமணம் செய்துவைக்க யாருமில்லாமல் திருமண வயதைக் கடந்து முதிர்கன்னிகளாக வாழ்கின்றனர் என்றனர்.