ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவின் வெற் றியை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் மற்றும் ஜெயலலிதா இல்லம் அமைந்துள்ள போயஸ் கார்டன் ஆகிய இடங்களில் அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடினார்கள்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆனால், அதற்கு முன்பாகவே ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் மற்றும் ஜெயலலிதாவின் இல்லம் அமைந்துள்ள போயஸ் கார்டனிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவியத் தொடங்கினர்.
அதிமுக தலைமை அலுவலகத்தில்..
தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வசதியாக அதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் எல்.இ.டி. டிவி வைக்கப்பட்டிருந்தது. அதில் ஒவ்வொரு சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட போதும், ஜெயலலிதா பல ஆயிரம் வாக்குகள் தொடர்ந்து முன்னிலை பெற்றார். இதனை அதிமுகவினர் பட்டாசுகளை வெடித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்கள்.
காலை 10 மணிக்கு அமைச் சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், ஆர்.வைத்திலிங்கம், பி.பழனியப்பன், எடப்பாடி பழனிச் சாமி ஆகியோர் ராயப்பேட்டை அலுவலகம் வந்து தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
அதிமுக அலுவலகத்திலிருந்த எம்ஜிஆர் சிலைக்கும், ஜெயலலிதாவின் படத்துக்கும் பால் அபிஷேகம் செய்து வெற்றி களிப்பை வெளிப்படுத்தினர்.
போயஸ் கார்டனில்..
முதல் சுற்று முடிவுகள் அறிவிக்கப் பட்டது முதல் போயஸ் கார்டனில் பட்டாசு சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை பட்டாசுகள், இனிப்புகளுடன் தொண்டர்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்து கொண்டிருந்தனர்.
எம்.ஜி.ஆர். வேடமிட்டும், உடல் முழுவதும் இரட்டை இலையை வரைந்து கொண்டும் தொண்டர்கள் வந்திருந்தனர்.
உற்சாக மிகுதியில் ஆண், பெண் தொண்டர்கள் நடனமாடி மகிழ்ந்தனர். காலை 10.40 மணிக்கு போயஸ் கார்டன் வந்த அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், ஆர்.வைத்தி லிங்கம், பி.பழனியப்பன், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பகல் 11.45-க்கு புறப்பட்டுச் சென்றனர்.
அமைச்சர்கள், அதிமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாநகராட்சி மேயர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் என அதிமுகவினர் பூங்கொத்துகள், இனிப்புகளுடன் வந்து கொண்டிருந்தனர்.
அதிமுகவினரின் கொண்டாட்டத் தால் ராயப்பேட்டை அலுவல கம் மற்றும் போயஸ் கார்டன் விழாக்கோலம் பூண்டிருந்தது. ஏராளமான காவல்துறையினர் பாது காப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். ஜெயலலிதாவின் வெற்றி அறிவிக்கப்பட்டதும் அதிமுகவினர் கலைந்து சென்றனர்.