சு.கோமதிவிநாயகம்
கோவில்பட்டி
சுதந்திர போராட்ட வரலாற்றில் வீரபாண்டிய கட்டபொம்மனின் பங்கு மகத்தானது. பாஞ்சாலங் குறிச்சியை ஆட்சி செய்த கட்ட பொம்மன், ஆங்கிலேய அரசின் வரி வசூலுக்கு எதிராக கர்ஜித்தார். அவர்களுக்கு அடிபணியாமல் சிம்மசொப்பனமாக விளங்கினார். இறுதியில் சூழ்ச்சி செய்து கட்டபொம்மனை கைது செய்த ஆங்கிலேயர்கள், அவரை கயத்தாறில் தூக்கிலிட்டனர்.
சிவாஜி சார்பில் சிலை
கட்டபொம்மன் தூக்கிலிடப் பட்ட இடத்தில் அவருக்கு நடிகர் சிவாஜி கணேசன் தனது சொந்த செலவில் சிலை வைத்தார். இச்சிலை கடந்த 1970-ம் ஆண்டு திறக்கப்பட்டது. அதன்பின்னர் சிலை அருகே பாஞ்சாலங்குறிச்சி கோட்டை வடிவில் ரூ.1.20 கோடி யில் மணிமண்டபம் கட்டப்பட்டு, கடந்த 2015-ம் ஆண்டு திறக்கப் பட்டது.
இந்த மணிமண்டபத்தில் 7.25 அடி உயரத்தில் கம்பீரமான தோற்றத்தில் கட்டபொம்மனின் வெண்கலச்சிலை வைக்கப்பட் டுள்ளது. கட்டபொம்மன் தூக்கி லிடப்பட்ட அக்.16-ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் ஏராள மானோர் மணிமண்டபத்துக்கு வந்து புகழஞ்சலி செலுத்து கின்றனர். இன்று அவரது 220-வது நினைவு நாள் கடைபிடிக்கப்படுகிறது.
பேருந்துகள் நிற்பதில்லை
மணிமண்டபத்தில் கட்ட பொம்மனுக்கு மூடிசூட்டுவது போன்றும், முயல் ஒன்று நாயை விரட்டிச் செல்வது போன்றும் இரண்டு சித்திரங்கள் மட்டுமே வரையப்பட்டுள்ளன.
அவரது வாழ்க்கையில் நடைபெற்ற வீரதீர நிகழ்ச்சிகளை விளக்கி மணிமண்டபத்தில் மேலும் சித்திரங்கள் வைக்க வேண்டும். கட்டபொம்மன் பயன்படுத்திய உடை, வாள் உள்ளிட்ட பொருட்களை காட்சிப்படுத்த வேண்டும்.
இதன்மூலம் இளைய தலை முறையினர், அவரது வீரவர லாற்றை அறிந்துகொள்ள முடியும் என்று, சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், மணிமண்டபத்தில் சுத்தி கரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து தர வேண்டும். அனைத்து பேருந்து களும் மணிமண்டபத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண் டும். நூலகம் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.
ஒளி ஒலி காட்சி
இதுகுறித்து வீரசக்கதேவி ஆலயக்குழு தலைவர் எம்.முருக பூபதி கூறும்போது, “கயத்தாறு மணிமண்டபத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனின் கம்பீரமான வெண்கல சிலை உள்ளது. ஆனால், அவர் குறித்து பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் உள்ளது போல் சித்திரங்கள் இல்லை. எனவே, சித்திரங்கள் அமைக்க வேண்டும். 3 அடுக்கு கட்டிடமான மணிமண்டபத்தின் ஒரு தளத்தில் ஒளி, ஒலி காட்சி அமைக்க வேண்டும்.
இதேபோல், பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் தண்ணீர் வசதி இல்லை. அங்கு 4 கழிப்பறைகள் இருந்தும் தண்ணீர் இல்லாததால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
மழைக்காலம் முடிந்த ஓரிரு மாதங்களில் அங்குள்ள புற்கள் அனைத்தும் காய்ந்து கருகி விடும். எனவே, பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்கு நிரந்தர தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். கோட்டை பராமரிப்பு பணியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் 16 பேர் இருந்தனர். தற்போது ஒருவர் மட்டுமே உள்ளார்.
ஒப்பந்த அடிப்படையில் 4 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 10 பேரை நியமிக்க நடவடிக்கை தேவை” என்றார் அவர்.