சென்னை
ராஜீவ் காந்தி மரணம் குறித்த கருத்தை சீமான் தவிர்த்திருக்கலாம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
நாங்குநேரி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று விமானத்தில் மதுரை புறப்பட்டுச் சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
இடைத்தேர்தல் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதிக வாக்கு
வித்தியாசத்தில் இரு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்.
ராஜீவ் காந்தி மரணம் தொடர்பாக சீமான் பேசியது குறித்து?
இந்த காலகட்டத்தில் ராஜீவ் காந்தி இறப்பு தொடர்பான கருத்தை சீமான் தவிர்த்திருக்கலாம்.
எந்த தேர்தலாக இருந்தாலும் தொடர்ந்து நாங்கள்தான் ஜெயித்து வருகிறோம் என்று மு.க.ஸ்டாலின் கூறி வருகிறாரே?
அவர் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து பேசி வருகிறார். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகள் உட்பட எந்த தேர்தல்
வந்தாலும் அதிமுகதான் வெற்றி பெறும் என்ற சூழல் உருவாகி உள்ளது. அன்று இருந்த நிலைமை வேறு. தற்போது நிலைமை மாறி
யுள்ளது. மக்களின் முழுமையான கவனம் அதிமுக பக்கம் திரும்பியுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலுக்கு அதிமுக தயாராகி வருகிறதா?
உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடந்தாலும் அதை சந்தித்து வெற்றி பெறும் வகையில் அதிமுக தயாராக உள்ளது.
அதிமுக பெதுக்குழு எப்போது நடக்கும்?
நடக்க வேண்டிய நேரத்தில் பொதுக்குழு நடக்கும்.
இவ்வாறு அவர் பதிலளித்தார்.