புதுச்சேரி
சீமான் தரம் தாழ்ந்த அரசியல்வாதி என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அக்.13-ம் தேதி சீமான், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்துப் பேசும்போது, "ராஜீவ் காந்தி இந்திய அமைதிப்படை என்கிற அநியாயப் படையை அனுப்பி என் இன மக்களைக் கொன்று குவித்தார். என் இனத்தின் எதிரியான ராஜீவை தமிழர் தாய் மண்ணில் கொன்று குவித்தது வரலாறு. ஒரு காலம் வரும். வரலாறு திருப்பி எழுதப்படும்'' என்று பேசினார்.
சீமானின் இந்தப் பேச்சுக்கு தமிழக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து இன்று (அக்.15) சாமிப்பிள்ளைத் தோட்டம் பகுதியில் முதல்வர் நாராயணசாமி இன்று வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.
பிரச்சாரத்தின்போது முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், ''சீமான் தரம் தாழ்ந்த அரசியல்வாதி. ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் உயிர் இழந்தது எங்களுக்கு மிகப்பெரிய பேரிழப்பு. ராஜீவ் இறப்பை கொச்சைப்படுத்திப் பேசும் சீமான் அரசியல்வாதியாக இருக்கத் தகுதியற்றவர். முன்னுக்குப் பின் முரண்பாடாகப் பேசி விளம்பரம் தேடுபவர். எந்த தேர்தலிலும் அவர் கட்சியினர் டெபாசிட் கூட வாங்கியதில்லை. அவர் திருத்திக் கொள்ளாவிட்டால், மக்கள் திருத்துவார்கள்" என்று தெரிவித்தார்.