தேனி
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து சிறையில் உள்ள மாணவர்கள் பிரவீன் அவரது தந்தை சரவணன் மற்றும் ராகுல் அவரது தந்தை டேவிஸ் ஆகிய 4 பேரின் ஜாமீன் மனுக்களை தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இவர்களின் ஜாமீன் மனு தள்ளுபடியாவது இது 3-வது முறையாகும்.
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் முதன்முதலாக கைதான சென்னை மாணவர் உதித்சூர்யா அவரின் தந்தை டாக்டர் வெங்கடேசன் அளித்த தகவலின் அடிப்படையில் சிபிசிஐடி விசாரணை நீண்டது. இதில் மாணவர் பிரவீன், ராகுல் ஆகியோர் சிக்கினர்.
இவர்கள் சார்பில் வழக்கறிஞர் விஜயகுமார் தேனி நீதித்துறை நடுவர் விரைவு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு கடந்த மாதம் 30-ம் தேதி மனுத்தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இவர்களின் ஜாமீன் மனுக்கள், இன்று (அக்.15) மூன்றாவது முறையாக நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பன்னீர்செல்வம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி 4 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், நால்வரது ஜாமீன் மனு சம்பந்தமாக தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நாளை(அக்.16) மனு அளிக்க உள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்தார்.
இர்பான் காவல் நீட்டிப்பு:
இதற்கிடையில், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக கைது செய்யப்பட்ட தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவன் இர்பான் நீதிமன்ற காவல் நிறைவடைந்து இன்று தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம் நீதிமன்ற காவலை நீட்டித்து வரும் 25-ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
இர்பானை நேற்று ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்தனர் சிபிசிஐடி அதிகாரிகள். ஆனால், நேற்றிரவே அவரை நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்திவிட்டனர். விசாரணை அதிகாரி சென்னை பயணிக்க வேண்டியதால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாகக் கூறினர்.