மாணவர் உதித்சூர்யா (இடது ஓரம்); உதித்சூர்யாவின் தந்தை வெங்கடேசன் (வலது ஓரம்) 
தமிழகம்

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் உதித்சூர்யாவின் தந்தையே வில்லன்: உயர் நீதிமன்றம் கருத்து

கி.மகாராஜன்

மதுரை

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவன் உதித்சூர்யாவின் தந்தை டாக்டர் வெங்கடேசன்தான் உண்மையான வில்லன் என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த மாணவன் உதித்சூர்யா, அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் உதித்சூர்யா கைதாவதற்கு முன்பு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அவர் கைதான நிலையில் முன்ஜாமீன் மனு ஜாமீன் மனுவாக மாற்றப்பட்டுள்ளது.

உதித்சூர்யாவின் தந்தை வெங்கடேசன் ஜாமீன் கேட்டு தேனி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு கடந்த வாரம் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் உதித்சூர்யாவின் ஜாமீன் மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று (அக்.15) விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, "உதித்சூர்யா வழக்கில் அவரது தந்தை வெங்கடேசன்தான் உண்மையான வில்லன். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் என்பது மன்னிக்க முடியாத குற்றமாகும். வெங்கடேசனை சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்காதது ஏன்?" என கேள்வி எழுப்பினார்.

சிபிசிஐடி சார்பில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர். இதனால் உதித்சூர்யாவுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணையை அக். 17-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT