அ.அருள்தாசன்
திருநெல்வேலி
நாங்குநேரி இடைத்தேர்தல் களத்தில் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ள கட்சிகள், பிளக்ஸ் போர்டுகளோ, பிளாஸ்டிக் கொடிகளோ இல்லாமல், தங்கள் தலைவர் களை வரவேற்க ஏற்பாடுகளை செய்தி ருந்தது பாராட்டைப் பெற்றுள்ளது.
தமிழகத்தில் சமீப ஆண்டுகளாக நடைபெற்றுமுடிந்த தேர்தல்களின்போது கட்சித் தலைவர்களை வரவேற்று சாலை யோரங்களிலும், மக்கள் அதிகம் கூடும் இடங் களிலும் அரசியல் கட்சியினர் பிளக்ஸ் போர்டுகளை வைத்திருந்தனர். தலைவர்கள் வரும் வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கில் மெல்லிய பிளாஸ்டிக் கொடி, தோரணங் களையும் கட்டியிருந்தனர். பிரச்சாரத் துக்குப்பின் இந்த பிளாஸ்டிக் கொடிகள் குப்பையோடு குப்பையாக அந்த இடங் களிலேயே அவிழ்ந்து கிடக்கும் காட்சி களையும் தேர்தல் களத்தில் பார்த்திருக் கிறோம். இதனால், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படும் என்பதால் அரசியல் கட்சிகள் காகிதத்தால் உருவாக்கப்பட்ட கட்சி கொடி களை பயன்படுத்த வேண்டும் என்று தேர்தல் அலுவலர்கள் அறிவுறுத்தி வந்தனர். ஆனாலும், இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமல் இருந்தது.
இவ்வாண்டு தொடக்கத்தில் தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தி வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் உட்பட பல்வேறு பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தமிழக அரசு தடைவிதித்தது. அதுமுதல் கட்சியினர் பிளாஸ்டிக் கொடிகளை பயன்படுத்துவதை குறைத்துவந்தனர். அதேநேரத்தில் கட்சித் தலைவர்களை வரவேற்கும் பிளக்ஸ் போர்டுகளை வழிநெடுகிலும் வைப்பதை தவிர்க்கவில்லை.
கடந்த சில வாரங்களுக்குமுன் சென்னை யில் பிளக்ஸ் போர்டு விழுந்து மாணவி சுப காயமடைந்ததை அடுத்து, உயர் நீதிமன்றத்தின் தலையீட்டின்பேரில் தமிழக அரசும் பிளக்ஸ் போர்டுகள் வைக்க தடைவிதித்து உத்தரவிட்டது. தற்போது அரசியல் கட்சிகளின் நிகழ்சிகள், திருமணங் கள் உள்ளிட்ட தனியார் நிகழ்ச்சிகளில் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்படுவதில்லை.
நாங்குநேரியில் நடைபெறும் சட்டப் பேரவை இடைத்தேர்தலிலும் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்படாதது, இத் தொகுதி மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. களத்தில் முக்கிய கட்சிகளாக போட்டியிடும் அதிமுகவும் தோழமை கட்சிகளும், காங்கிரஸ், திமுக கூட்டணி கட்சியினரும் தங்கள் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு வரும் இடங்களில் வழிநெடுக காகிதம் மற்றும் துணியால் ஆன கட்சி கொடிகளையும், தலைவர்களின் படங்களையுமே கட்டியிருந்தனர்.
இத்தொகுதியில் தமிழக முதல்வர் கே.பழனிசாமி கடந்த 2 நாட்களாக பிரச் சாரம் செய்த பகுதிகளிலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சாரம் செய்த இடங்களிலும் அவ்வாறு காகிதத் தால் உருவாக்கப்பட்ட சிறிய கட்சி கொடி களை சாலையோரங்களிலும், முக்கிய சந்திப்புகளிலும் கட்டியிருந்தனர். `சுற்றுச் சூழலுக்கு உகந்த இந்த நடவடிக்கையை கட்சியினர் கையாண்டுள்ளது முன்மாதிரி நடவடிக்கை’ என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.
இனிவரும் தேர்தல்களிலும் இதேநடை முறை தொடர்ந்தால் பிளாஸ்டிக் கொடிகளை பயன்படுத்துவதும், வரவேற்பு பிளஸ்க் போர்டுகளை வைத்து போக்குவரத்துக்கு இடையூறு செய்வதும் முற்றிலும் தடுக்கப்படும் என்று சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகிறார்கள்.