தமிழகம்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் உருமாறும் திருப்பூர் ‘டவுன்ஹால்’- ரெங்கசுவாமி குடும்பத்தார் விரும்புவது என்ன?

செய்திப்பிரிவு

இரா.கார்த்திகேயன்

திருப்பூர் மாநகரின் அடையாளமாக விளங்கும் டவுன்ஹால் கலையரங்கத்தை, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் 4 அடுக்கு கொண்ட மாநாட்டு மைய கட்டிடமாக மாற்றவும், பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடமாக மாற்றவும் திட்டமிடப்பட்டு அதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் தொடங்கி உள்ளன. பாரம்பரியமிக்க அந்த கட்டிடத்துக்கு ஏற்கெனவே உள்ள தங்கள் குடும்ப பெயரே நீடிக்க வேண்டும் என விரும்புகின்றனர், ரெங்கசுவாமி குடும்பத்தினர்.

பழைய ரேடியோ மைதானம்...

இந்த இடத்தின் பெருமை அறிய மூன்று தலைமுறைக்கு முன்பு பயணிக்கலாம்.

திருப்பூர் மாநகரின் மையத்தில் உள்ள டவுன்ஹால் கலையரங்கின் முந்தைய பெயர் ‘பழைய ரேடியோ மைதானம்’. ஒரு காலத்தில் தகவல் மையமாக இருந்த இடம். செய்திகளை கேட்கவோ, தெரிந்துகொள்ளவோ இன்றைக்குப்போல் அப்போதெல்லாம் தொழில்நுட்ப வசதி இல்லாததால், திருப்பூரில் வாழும் பொதுமக்கள், ரேடியோவில் பாடல் கேட்கவும், செய்திகள் தெரிந்துகொள்ளவும் டவுன்ஹாலுக்குத்தான் வருவார்கள். இங்குதான் ஒலிபெருக்கிகள் கட்டி, நாள்தோறும் ஒலிபரப்பு செய்வார்கள்.

2-ம் உலகப்போர் நடைபெற்றபோது, போரில் பங்கேற்ற நாடுகளின் நிலையை அறிந்துகொள்ள, இந்த இடம் பலருக்கும் தகவல் அளிக்கும் மையமாக இருந்தது. நாளடைவில் தகவல் தொழில்நுட்பமும், நகரமும் வளர தகவல் மையத்தின் வடிவமும், அமைப்பும் மாறியது. குறைந்த வாடகையில் செயல்படும் உள் கலையரங்கமாக அப்போதைய நகராட்சி நிர்வாகம் மாற்றியது.

டவுன்ஹாலில் காலியாக இருந்த இடத்தில், உள் கலையரங்கை ஏற்படுத்தித் தந்தவர்கள் பிரபல தொழிலதிபர் ரெங்கசுவாமியின் குடும்ப வாரிசுகளான எஸ்.ஆர்.சொக்கலிங்கம் மற்றும் எஸ்.கே.சவுண்டப்பன் ஆகியோர். 1945-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, அன்றைக்கே ரூ.1 லட்சம் மதிப்பில், காலம் கடந்தும் இன்றைக்கும் பெயர் சொல்லும் அளவுக்கு உறுதியான கட்டிடத்தை கட்டி அன்றைய திருப்பூர் நகராட்சியிடம் ஒப்படைத்தனர். பரந்துவிரிந்த பெரிய தூண்கள், தற்போது கட்டிடத்தை இடிக்கவே தொழிலாளர்கள் சிரமப்படும் அளவுக்கு மிகவும் வலிமை படைத்த கட்டிடத்தைத் தான், மாநகராட்சி நிர்வாகம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாற்ற உள்ளது.

இதை அறிந்த ரெங்கசுவாமி குடும்பத்தாரின் வாரிசுகள் டவுன்ஹால் உள் கலையரங்கை அவ்வப்போது பார்வையிட்டு வருகின்றனர். ரெங்கசுவாமியின் இளைய மகன் எஸ்.ஆர்.ராமலிங்கம் கூறும்போது, “எனது அண்ணன்கள் எஸ்.ஆர். சொக்கலிங்கம், எஸ்.கே.சவுண்டப்பன் ஆகியோர் அன்றைய நகரசபைத் தலைவராக இருந்த கே.என்.பழனிசாமி கேட்டுக்கொண்டதன் பேரில், ரூ. 1 லட்சம் நிதி தந்து கட்டிடத்தை கட்டித் தந்தார்கள். 1945 ஜூன் 26-ம் தேதி அன்றைய கோவை ஜில்லா கலெக்டரை அழைத்து அடிக்கல் நாட்டினர். அதன்பின்னர் கட்டிடம் கட்டப்பட்டு, 1955-ம் ஆண்டு முதல்வராக இருந்த காமராஜர், அவரது அமைச்சரவையில் இருந்த பக்தவச்சலம் மற்றும் நடிகை கே.பி.சுந்தராம்பாள் ஆகியோரை அழைத்து வந்து, டவுன்ஹால் கலையரங்கு திறக்கப்பட்டது.
சுமார் 75 ஆண்டுகளைக் கடந்து கட்டிடம் நிலைத்து நிற்கிறது. இத்தனை காலமாக பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இருந்தது என்கிற மகிழ்ச்சி காலம் கடந்தும் மனதில் நிலைக்கும். இந்த அரங்கு டவுன்ஹால் ரெங்கசுவாமி கலையரங்கம் என்ற பெயரை தாங்கி நிற்கிறது” என்றார்.

ரெங்கசுவாமியின் பேரன் எஸ்.ஆர்.சி தண்டபாணி கூறும்போது, “கட்டிடத்தை கட்டிய எங்கள் குடும்பம் நகராட்சி வசம் ஒப்படைத்துவிட்டது. அவர்களும் அதை இன்று வரை பயன்படுத்தி வந்தனர். ஆனால் கட்டிடத்தை ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் மாற்றுவது குறித்து எங்களுக்கு தகவல் அளிக்கப்படவில்லை. வாய்மொழியாக கூட சொல்லவில்லை. மாநகராட்சி எங்கள் குடும்பத்தாரை மறந்துவிட்டது. இத்தனை ஆண்டுகாலமாக மாநகராட்சி பயன்படுத்தி வந்ததற்காக, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்படும் புதிய அரங்குக்கும் ‘ரெங்கசுவாமி டவுன்ஹால் கலையரங்கு’ என்ற பெயரை வைக்க வேண்டும் என எங்கள் விருப்பத்தை, திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ. சு.குணசேகரிடம் தெரிவித்துள்ளோம். அவரும் முதல்வரிடம் பேசி, இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். மாநில அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் என நம்புகிறோம்” என்றார்.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “இதுகுறித்து திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். 4 அடுக்கு கொண்ட மாநாட்டு மைய அரங்கு வர உள்ளது. ரெங்கசுவாமி குடும்பத்தாரின் கோரிக்கையை நிச்சயம் பரிசீலிப்போம்” என்றனர்.

SCROLL FOR NEXT