தமிழகம்

கொல்லிமலையை ஆண்ட வல்வில் ஓரிக்கு மணி மண்டபம்?

செய்திப்பிரிவு

கி.பார்த்திபன்

சங்க காலத்தில் கொடையில் சிறந்தவர்களில் பேகன், பாரி, காரி, ஆய்அண்டிரன், அதியமான், நள்ளி மற்றும் ஓரி ஆகிய கடையேழு வள்ளல்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இதில் ஓரி மன்னன் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்து வந்தார். வில் வித்தையில் சிறந்த விளங்கிய ஓரி மன்னனின் வீரம், கொடைத்தன்மை குறித்து சங்ககால தமிழ் இலக்கியங்களில் எட்டுத்தொகை நூல்கள் என குறிப்பிடப்படும் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவற்றிலும், பத்துப்பாட்டு நூலான சிறுபாணாற்றுப்படையிலும் ஏராளமான பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

ஓரி மன்னனின் சிறப்பை போற்றும் வகையில் கடந்த 1975-ம் ஆண்டு கொல்லிமலை செம்மேட்டில் ஓரி மன்னன் குதிரை மீது அமர்ந்திருப்பது போன்ற சிலை வடிவமைக்கப்பட்டது. ஆண்டுதோறும் தமிழ் மாதமான ஆடி 18-ம் தேதி ஓரி மன்னனுக்கு இரு தினங்கள் அரசு விழாவும் கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவில் வில்வித்தையில் சிறந்து விளங்கிய ஓரி மன்னனின் சிறப்பை போற்றும் வகையில் வில்வித்தை போட்டி நடத்தப்படுகிறது. இதுபோல், பாரம்பரிய நடனங்களும் நடத்தப்படுகின்றன.
இதுபோன்ற பல்வேறு சிறப்புகள் பொருந்திய ஓரி மன்னனுக்கு அவர் ஆட்சி செய்த கொல்லிமலையில் மணி மண்டபம் கட்ட வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

இதுகுறித்து நாமக்கல்லைச் சேர்ந்த சுற்றுலா மற்றும் கலாச்சார ஆர்வலர் ஆர். பிரணவக்குமார் கூறும்போது, கொல்லிமலை கிழக்கு தொடர்ச்சி மலையில் பெரிய மலையாக உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 4,500 அடி உயரம் கொண்ட கொல்லிமலை 441.4 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டது. ஏராளமான மூலிகை வளம் கொண்ட இந்த மலையில் வளப்பூர் நாடு, வாழவந்தி நாடு, திண்ணனூர் நாடு, சேலூர் நாடு, அரியூர் நாடு, குண்டூர் நாடு, தேவானூர் நாடு, குண்டுனி நாடு, ஆலந்தூர் நாடு, திருப்புலி நாடு, எடப்புலி நாடு, சித்தூர் நாடு, பைல் நாடு, பெரக்கரை நாடு (ஒரு நாடு என்பது ஒரு கிராம ஊராட்சியை குறிக்கும்) என 14 நாடுகள் உள்ளன. இந்த 14 நாடுகளையும் உள்ளடக்கிய கொல்லிமலையை தலைமையிடமாகக் கொண்டு ஓரி மன்னன் ஆட்சி செய்து வந்தார்.

வில்வித்தையில் சிறந்து விளங்கியதால் ஓரி மன்னன் வல்வில் ஓரி என அழைக்கப்பட்டார். ஓரி குதிரையை பயன்படுத்தி வந்துள்ளார். மேலும், பெரும் கொடையாளியாகவும் இருந்து வந்துள்ளார். அவரது வீரம், கொடைத் தன்மை குறித்த சிறப்புகள் சங்ககால தமிழ் இலக்கியங்களான நற்றிணை, அகநானூறு, புறநானூறு உள்ளிட்டவற்றில் இடம் பெற்றுள்ளன.

கடையேழு வள்ளல்களில் ஒருவரான அதியமானுக்கு தர்மபுரி நகரில் இருந்து 7 கி.மீ., தொலைவில் உள்ள அதியமான் கோட்டையின் அருகே மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அதில், அதியமான் குறித்த சிறப்புகள் இடம் பெற்றுள்ளன. அதுபோல், வல்வில் ஓரி மன்னனுக்கும் அவர் ஆட்சி செய்து வந்த கொல்லிமலை அல்லது கொல்லிமலை அடிவாரத்தில் மணி மண்டபம் கட்ட வேண்டும்.
அதில், அவரது உருவப்படம், ஆட்சி முறை, கொடைத்தன்மை, ஆட்சி செய்த நிலப்பரப்பளவு போன்றவற்றை இடம்பெறச் செய்ய வேண்டும். கொல்லிமலை மூலிகை வளம் மட்டுமின்றி பல்வேறு சிறப்புகள் பொருந்திய மலை என்பதால் ஆண்டு முழுவதும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கொல்லிமலைக்கு வந்து செல்கின்றனர். மணி மண்டபம் கட்டப்பட்டால், மலையின் அழகை கண்டு ரசிக்கவரும் சுற்றுலாப் பயணிகள் ஓரி மன்னனின் சிறப்பையும் அறிய வாய்ப்பாக அமையும்.

இது சுற்றுலா மேம்பாட்டுத் துறைக்கு வருவாயை அதிகரிக்கச் செய்வதுடன், கொல்லிமலை மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும். அதேவேளையில் மற்ற கோடை வாசஸ்தலங்களில் கோடை விழா நடத்துவது போல் கொல்லிமலையிலும் கோடை விழா அல்லது எந்த சீஸனில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக உள்ளது என்பதைக் கணக்கிட்டு விழா நடத்தினால் சுற்றுலாப் பயணிகள் வருகை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது’ என்றார்.

SCROLL FOR NEXT