தமிழகம்

மாணவர்கள் புதுமையாக சிந்தித்தால் விஞ்ஞானி ஆகலாம்: அறிவியல் திருவிழாவில் ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை

புதுமையாக சிந்தித்தால் மாண வர்களால் விஞ்ஞானி ஆக முடியும் என்று ‘நாளைய விஞ்ஞானி’ சென்னை மண்டல அறிவியல் திருவிழாவில் ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு அறிவுறுத்தினார்.

வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலாஜி (விஐடி) வழங்கும் ‘நாளைய விஞ்ஞானி’ என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் திருவிழாவை ‘இந்து தமிழ்’ நாளிதழும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்துகின்றன. இதில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் கடந்த ஒரு மாதமாக ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டனர். தங்கள் பகுதியில் நிலவும் ஏதேனும் ஒரு பிரச்சினையை அடையாளம்கண்டு, பல்வேறு அறிவியல் வழிமுறைகளைப் பயன்படுத்தி அதற்கான தீர்வுகளை மாணவர்கள் உருவாக்கி இருந்தனர்.

இந்நிலையில், மாணவர்கள் தயாரித்த ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கும் அறிவியல் திருவிழா தமிழகம் முழுவதும் 4 மண்டலங்களில் நடைபெறுகிறது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளடக்கிய சென்னை மண்டல அறிவியல் திருவிழா சென்னை விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதன் தொடக்க விழாவில் பங்கேற்றவர்கள் பேசியதாவது:

‘இந்து தமிழ்’ நாளிதழின் வர்த்தகப் பிரிவு தலைவர் சங்கர் வி.சுப்ரமணியம்: தமிழகத்தில் ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதை மாற்றும் நோக்கத்தில் பள்ளி மாணவர்களின் ஆய்வுத் திறன்களை கண்டறிந்து ஊக்குவிக்கும் பணிகளை முன்னெடுக்க நீண்டகாலமாக முயற்சித்து வந்தோம். அதன்பலனாக தற்போது ‘நாளைய விஞ்ஞானி’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

விஐடி பல்கலைக்கழக இணை துணைவேந்தர் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன்: பழங்காலத்தில் அறிவியல், கட்டிடக்கலை உட்பட அனைத்து துறைகளிலும் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அதேபோல, வலிமைமிக்க புதிய இந்தியாவை உருவாக்க எதிர்கால தலைமுறையினரான மாணவர்கள் முன்வர வேண்டும். உங்களிடம் புதைந்துகிடக்கும் திறமைகளை அறிந்து, அதை மேம்படுத்த வேண்டும். அதற்கான வழிகாட்டுதல்கள் இந்த நிகழ்ச்சி மூலம் கிடைக்கும்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில துணைத் தலைவர் ஆர்.தனஞ்செயன்: மக்களிடம் இருக்கும் தவறான நம்பிக்கைகளை அகற்றுவதற்கு அறிவியல் குறித்த விழிப்புணர்வு அவசியம். இந்தியாவில் சராசரியாக ஒரு லட்சம் மாணவர்களில் 2 பேர்தான் விஞ்ஞானிகளாகும் திறன் பெற்றுள்ளனர். இதற்கு மாணவர்கள் புரிந்து படிக்காமல், மனப்பாடம் செய்து கற்பதே முக்கிய காரணமாக இருக்கிறது. இந்நிலை மாற பள்ளிகளிலேயே மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும். ‘நாளைய விஞ்ஞானி’ நிகழ்ச்சி அதற்கு உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

இதையடுத்து, அறிவியல் திருவிழாவில் 190 தலைப்புகளில் மாணவர்கள் தங்கள் ஆய்வுகள் தொடர்பான கட்டுரைகளை சமர்ப்பித்து உரையாற்றினர். இந்த ஆய்வுகளில் இருந்து 25 சிறந்த ஆய்வுகள், வேலூரில் உள்ள விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் நவம்பர் மாதம் நடக்க உள்ள மாநில அறிவியல் திருவிழாவில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டன.

நிறைவு விழாவில் பங்கேற்றவர்கள், மாணவர்கள் மத்தியில் பேசியதாவது:

ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு: மனிதனின் கற்பனைக்கும், கனவுகளுக்கும் எல்லை கிடையாது. ஆனால், நம்மில் பலரும் கனவுகளை நனவாக்க போராடாமல், சமரசம் செய்துகொண்டு சாதாரணமாக வாழ்ந்து முடிக்கிறோம். இன்றைய நவீன உலகில் நீங்கள் சாதனை புரிய நன்கு படித்தால் மட்டும் போதாது. புதுமையாக சிந்திக்கும் திறன்களையும் வளர்த்துக்கொண்டால் மட்டுமே வெற்றி பெற முடியும், சிறிய தேசமான இஸ்ரேல் சர்வதேச அளவில் வல்லமையுடன் திகழ, அந்த நாட்டின் புதுமையான கண்டுபிடிப்புகளே காரணம். இஸ்ரேலில் மக்கள் நலன் சார்ந்த ஆய்வுகளுக்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

அதேபோல, அன்றாட வாழ்வில் நிலவும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை நீங்கள் கண்டறிய வேண்டும். புதுமையான சிந்தனைகள் கொண்ட மாணவர்கள் விஞ்ஞானி ஆகலாம். புதுமைகளை கண்டறிவதுடன் நின்றுவிடாமல் அடுத்த தளத்துக்கு நகர்த்தி, வணிகரீதியாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். ஒருபோதும் முயற்சிகளை கைவிடாமல் தொடர்ந்து உழைத்தால் நீங்க் நிச்சயம் வெற்றி பெறலாம். மாணவர்களின் இத்தகைய முயற்சிகளுக்கு பெற்றோரும், ஆசிரியர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

விஐடி பல்கலை கூடுதல் பதிவாளர் பி.கே.மனோகரன்: இந்த நிகழ்வில் பங்கேற்ற அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்றவர்கள்தான். நம்பிக்கையை கைவிடாமல் முயற்சித்தால் அனைத்து மாணவர்களும் சாதனை புரியலாம். மாணவர்களுக்கு வழிகாட்ட ‘நாளைய விஞ்ஞானி’ போன்ற இத்தகைய முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுப்போம்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில துணைத் தலைவர் உதயன்: இன்றைய தலைமுறை குழந்தைகளிடம் திறமைகள் நிறைந்துள்ளன. அதை கண்டறிந்து ஊக்குவித்தாலே வாழ்வில் பல்வேறு சாதனைகளை புரிவார்கள்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

அறிவியல் திருவிழாவில் பங்கேற்ற 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பெற்றோருடன் அறிவியல், தொழில்நுட்பம் குறித்த கலந் துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகளான என்.மாதவன், தீனதயாளன், ‘இந்து தமிழ்’ விற்பனை துறைத் தலைவர் டி.ராஜ்குமார் உள்ளிட்டோர் ஆசிரியர்கள், பெற்றோரிடம் உரையாற்றினர்.

‘இந்து தமிழ்’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாணவர்கள் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கும் பணிகளுக்கான ஏற்பாடுகளை அறிவியல் திருவிழாவின் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் எம்.ஜெகதீஸ்வரன் உள்ளிட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகள் மேற்கொண்டனர்.

மதுரை மற்றும் கோவை மண்டலங்களுக்கான ‘நாளைய விஞ்ஞானி’ அறிவியல் திருவிழா வரும் அக்டோபர் 20 ஆம் தேதி நடைபெறுகிறது.

தாங்கள் வாழும் பகுதியில் நிலவும் பிரச்சினைகளுக்கான காரணங்களையும், அதற்கான தீர்வுகளையும் பள்ளி மாணவர்கள் அறிவியல் வழிமுறைப்படி ஆராய்ந்து, ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கிறார்கள்.

மதுரை மண்டலம்:

மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி

இடம் - அமெரிக்கன் கல்லூரி, தல்லாகுளம், மதுரை

நேரம் - காலை 9 மணி முதல் மேலும் தகவல்களுக்கு - வி. இராமமூர்த்தி 9786073353 / ப. விஜயகுமார் 9894220609

கோவை மண்டலம்:

கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி

இடம் - எஸ்எஸ்விஎம் ஸ்கூல் ஆஃப் எக்சலென்ஸ்,

சைட் : 208 - 210, பெர்க்ஸ் மான்செஸ்டர் அபார்ட்மெண்ட் எதிரில், ராஜீவ் காந்தி நகர் ரோடு, உப்பிலிபாளையம், சிங்கநல்லூர், கோவை - 641015

நேரம் - காலை 9 மணி முதல்

மேலும் தகவல்களுக்கு: எஸ்.டி. பாலகிருஷ்ணன் 9443668881 / ம. சீனிவாசன் 7401840665

SCROLL FOR NEXT