சென்னை
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 5 பேருந்து நிலையங்களில் 10,940 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. முன்பதிவு தொடங்கியதில் இதுவரை 51,000 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு தொடர்ந்து நடைபெறுகிறது. பொதுமக்கள் இந்த வசதியினைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என போக்குவரத்துத்துறை அரசு முதன்மைச் செயலாளர் சந்தரமோகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
“தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும், முக்கியப் பண்டிகைகளான தீபாவளி மற்றும் பொங்கல் ஆகிய விழாக் காலங்களில் பொதுமக்கள் பாதுகாப்புடன், நல்ல முறையில் தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பிட ஏதுவாக, போக்குவரத்துத் துறையின் சார்பில் போதிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு, கூடுதலான பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது. அந்தவகையில், வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்துத் துறையின் சார்பில், மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று போக்குவரத்துக் கழகத்தின் தலைமையக கருத்தரங்கக் கூடத்தில் போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்தரமோகன் தலைமையில் கூட்டம் நடந்தது.
இதில் தீபாவளிப் பேருந்துகள் இயக்குவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆண்டும் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் (CMBT) கோயம்பேடு, தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி பேருந்து நிலையம் மற்றும் மாநகரப் போக்குவரத்துக் கழக கே.கே. நகர் பேருந்து நிலையம் ஆகிய 5 இடங்களிலிருந்தும் வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பேருந்துகள் இயக்கப்படும்.
வரும் 24/10/2019 முதல் 26/10/2019 வரையில் மேற்கூறிய இடங்களிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,225 பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளாக 4,265 பேருந்துகள் என மூன்று நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக, சென்னையிலிருந்து 10,940 பேருந்துகள் இயக்கப்படும். பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 8,310 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.
மேலும், மேற்கண்ட நாட்களில் திருப்பூர் மற்றும் கோயம்புத்தூரிலிருந்து சேலம், மதுரை, திருச்சி, தேனி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களுக்கு முறையே 1165 மற்றும் 920 பேருந்துகள் இயக்கப்படும். மேற்கண்ட நாட்களில் பெங்களூரிலிருந்து சேலம், திருவண்ணாமலை, வேலூர், சென்னை, கரூர், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களுக்கு 251 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
முன்பதிவு வசதி
பயணிகள் முன்பதிவு செய்துகொள்ள, நடைமுறையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக இணையதள வசதியான www.tnstc.in , www.redbus.in, www.paytm.com மற்றும் www.busindia.com போன்ற இணையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் முன்பதிவு கவுண்டர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. மேலும், பொதுமக்களின் வசதிக்காக தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கூடுதலாக இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளில் முன்பதிவு செய்வதற்கான வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களிடம் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளதைத் தொடர்ந்து, இந்த வசதியினை அனைவரும் பயன்படுத்திக்கொண்டு முன்பதிவினைச் செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அரசு நிர்ணயித்துள்ள கட்டணத் தொகை மட்டுமே இப்பேருந்துகளில் பெறப்படுகிறது.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தொடங்கப்பட்டுள்ள முன்பதிவு வாயிலாக இன்றைய நாள் வரையில் சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கு 33,870 பயணிகளும், பிற ஊர்களிலிருந்து முக்கிய ஊர்களுக்கு 17,338 பயணிகளும் ஆகமொத்தம், 51,208 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் 2.55 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.”
இவ்வாறு போக்குவரத்துக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.