காட்டில் விடப்பட்டுள்ள மூன்று மாத குட்டி யானை, யானைக் கூட்டத்துடன் சேர்க்கும் நடவடிக்கைகள் குறித்து 17-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகில் உள்ள கடம்பூர் கிராமத்தில் மூன்று மாத பெண் குட்டியானை சுற்றி வந்தது. தாயை பிரிந்து ஊருக்குள் புகுந்த அந்த குட்டியானையை வனத்துறையினர் மீட்டு காட்டுக்குள் விட்டனர்.
ஆனால், அடுத்த சில நாட்களில் அந்த குட்டி யானை திம்பம், ஹசனூர் கிராமங்களில் நுழைந்தது. உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து, குட்டியானையை மீண்டும் பிடித்து, சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் விலங்குகள் பராமரிப்பு மையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு, அம்முக்குட்டி என பெயர் சூட்டப்பட்டது. யானையின் உடல் நிலையும் பரிசோதிக்கப்பட்டது.
அப்போது அம்முகுட்டி குட்டியானை மிகவும் பலவீனமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, குட்டியானைக்கு பால் ஊட்டப்பட்டது. ஒரு வாரம் பராமரிக்கப்பட்ட நிலையில், குட்டி யானையை அதன் கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சியாக அதை மீண்டும் வனப்பகுதியில் வனத்துறையினர் விட்டுள்ளனர்.
குட்டியானையை வனப்பகுதிக்குள் விடுவதற்கு தடை கோரி சென்னையைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். காட்டில் விடப்பட்டுள்ள குட்டியானையை, யானைக் கூட்டம் சேர்த்துக் கொள்ளும் என்பது நிச்சயமில்லை எனவும், மூன்று மாத குட்டியான அதனால் சுயமாக உணவு உட்கொள்ள முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது.
காட்டில் விடப்படும் யானையை, புலி, காட்டு நாய் போன்ற விலங்குகள் கொன்று விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால், யானையை மீட்டு, மிருக காட்சி சாலையிலோ, யானைகள் முகாமிலோ பராமரிக்க கோரி வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தது. வனத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “காட்டில் விடப்பட்ட குட்டியானையை கண்காணித்து வருவதாகவும், அதை மற்ற யானைகள் சேர்த்துக் கொள்ளாவிட்டால், வனத்துறை கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும்” எனத் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “கண்காணிக்க அறிவியல் ரீதியான தொழில்நுட்பம் என்ன அரசிடம் உள்ளது, மூன்று மாத குட்டியானை தனக்கான உணவை தேட முடியாது என்பதால் அதற்கு எப்படி பால் கிடைக்கும். பிற விலங்குகளால் ஆபத்து ஏற்படுமே” என கேள்வி எழுப்பினர்.
“ஒருவேளை யானைக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் அதற்கு அரசு பொறுப்பேற்குமா?” எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், குட்டியானையை, யானைக் கூட்டத்துடன் சேர்க்கும் நடவடிக்கைகள் குறித்து 17-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக வனத்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.