சென்னை
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (அக்.14) வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, நாமக்கல், திருப்பூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகை, தஞ்சை ஆகிய 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 8 செ.மீ. மழையும், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் சேலம் மாவட்டம் மேட்டூர் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.