பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள போலீஸார் 
தமிழகம்

புதுச்சேரி அருகே இரு கிராம மீனவர்களுக்கிடையே மோதல்: 3 பேர் காயம்; 144 தடை உத்தரவு

செய்திப்பிரிவு

புதுச்சேரி

புதுச்சேரி அருகே உள்ள நல்லவாடு மற்றும் வீராம்பட்டினம் கிராம மீனவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 3 மீனவர்களுக்குக் கத்திக்குத்து விழுந்தது. கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி அருகே உள்ள நல்லவாடு மற்றும் வீராம்பட்டினம் மீனவர்களுக்கு இடையே சுருக்குவலை பயன்படுத்துவது தொடர்பாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நல்லவாடு மீனவ கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த மீன்பிடி வலைக்கு வீராம்பட்டினம் மீனவர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். கலவரம் உருவாவதைத் தடுக்கும் பொருட்டு இரு மீனவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று (அக்.14) நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இரு கிராம மீனவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இரு கிராம மீனவர்களும் ஆயுதங்களுடன் நடுக்கடலில் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக்கொண்டனர். இதில் 3 மீனவர்களுக்குக் கத்திக்குத்து விழுந்தது. மீனவர்களிடையே ஏற்பட்டுள்ள கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய போலீஸார் கடலோரத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதால் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

செ.ஞானபிரகாஷ்

SCROLL FOR NEXT