தமிழகம்

தேனியில் மசாலா தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

என்.கணேஷ்ராஜ்

தேனி

தேனி அருகே கோடங்கிப்பட்டியில் உள்ள தனியார் மசாலா தொழிற்சாலையில் இன்று (திங்கள்கிழமை) காலை சுமார் 8.30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தேனி - போடி மெயின்ரோடு அருகே கேரளாவைச் சேர்ந்தவர் நடத்தும் ஈஸ்டர்ன் மசாலா எனும் தனியார் மசாலா தொழிற்சாலை உள்ளது. காலையில் வழக்கம்போல் ஊழியர்கள் வேலைக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது மிளகாய் வற்றல் இருந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மிளகாய் வற்றலை பாதுகாக்க அந்த குடோனில் ஏசி வசதியும் இருந்துள்ளது. ஏசி இயந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மிளகாய் காய்ந்த நிலையில் இருந்ததால் தீ மளமளவென அடுத்தடுத்த குடோன்களிலும் தீ பரவியுள்ளது. உடனே ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் போராட்டம்:

தீ தொடர்ந்து கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது. மூன்று மணி நேரத்துக்கு மேலாக தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கப் போராடி வருகின்றனர். முதலில் தேனியிலிருந்து வரவழைக்கப்பட்ட 2 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க முயன்றன. தற்போது போடி, பாளையம், சின்னமன்னூர் என 10-க்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. தனியார் தண்ணீர் லாரிகளும் வரவழைக்கப்பட்டுள்ளன. ஆனால் தீயை இன்னும் கட்டுப்படுத்த முடியவில்லை.

மிளகாய் நெடி வீசுவதால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்கள் கண் எரிச்சல், மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்களாலும் நெடி காரணமாக முன்னேறிச் செல்ல இயலவில்லை.

விபத்து குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், எஸ்.பி. பாஸ்கரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.

SCROLL FOR NEXT