தூத்துக்குடி
பண்டைய தமிழர்கள் குடும்பத் தோடு அமர்ந்து நிலாச் சோறு சாப்பிட்டதை நினைவு கூறும் வகையில், ‘நிலாச் சோறு’ என்ற பெயரில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் உணவு திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தூத்துக்குடி ரோச் பூங்கா கடற்கரையில் நேற்று முன் தினம் இரவு இந்நிகழ்ச்சி நடை பெற்றது.
உணவகங்கள், திண்பண்டங் கள் விற்பனை செய்வோர் சுமார் 25 அரங்குகளை அமைத்திருந்தனர். மக்கள் மாலை 6 மணி முதலே ரோச் பூங்காவில் குவியத் தொடங்கினர். நிலா வெளிச்சம் வர வர உணவுத் திருவிழா களைகட்டத் தொடங்கியது.
புட்டு, பணியாரம், ஆப்பம், கொழுக்கட்டை, மீன் குழம்பு, சிறுதானிய உணவு வகைகள், கோவில்பட்டி கடலை மிட்டாய், கீழஈரால் காரச்சேவு என, பாரம்பரிய உணவுப் பொருட்களை மக்கள் ஆர்வமுடன் வாங்கி குடும்பத்தோடு அமர்ந்து உண்டு மகிழ்ந்தனர்.
எதிர்பார்த்ததை விட அதிக மக்கள் கடற்கரையில் கூடி நிலாச் சோறு சாப்பிட்டனர். மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணு சந்திரன், சார் ஆட்சியர் சிம்ரான் ஜித் சிங் கலோன் ஆகியோர் பங்கேற்று மக்களை உற்சாகப்படுத்தினர்.