சென்னை
டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனைகளுக்கு தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வருகின்றனர்.
நாடுமுழுவதும் டெங்கு காய்ச்சலால் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் கடந்த 8 மாதத்தில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவிவருவதால், டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கென்று தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. காய்ச்சலுடன் வருபவர்கள் முதலில் இந்த வார்டுகளில் அனுமதிக்கப்படுகின்றனர். பின்னர், யாருக்காவது டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவர்களை தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், மருத்துவக் குழுவினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு, ரத்தப் பரிசோதனைக் கூடங்களில் 24 மணி நேரமும் மருத்துவ ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் சென்னை அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருகின்றனர்.
இதனிடையே நேற்று முன்தினம் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் , திருப்பூர், திருவள்ளூர் மற்றும் சென்னையில் தலா ஒருவர் வீதம் 3 பேர் மட்டுமே டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளதாகவும் டெங்கு தடுப்பு மருந்துகள் போதுமான அளவு இருப்தாகவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.