அனைத்து நீர்நிலைகளிலும் தூர் வாருவது தொடர்பாக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
ஸ்ரீவைகுண்டம் அணையில் தூர்வாரக் கோரி, தூத்துக்குடி மாவட்ட மதிமுக செயலர் ஜோயல் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய 2-ம் அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதிமணி, தொழில்நுட்பத்துறை உறுப்பினர் பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வைகோ, பணிகள் வேகமாக நடைபெறவில்லை. போதிய ஆட்களும் இல்லை. தற்போது சுமார் 100 மீட்டர் தூரம் வரை புதர்களை மட்டுமே அகற்றியுள்ளனர். அதனால் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று வாதிட்டார்.
அரசுத் தரப்பு வழக்கறிஞர் அப்துல் சலீம் ஆஜராகி, தூர் வாருவது தொடர்பாக 7 பணிகளுக்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது. 24-ம் தேதி பணி ஆணை வழங்கப்படும். அதன்பிறகு பணிகள் வேகமாக நடைபெறும். இப்பணிகள் தொடர் பாக பசுமை தீர்ப்பாய அமர்வில் மாதம் ஒருமுறை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று வாதிட்டார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளையும் தூர் வார வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அதன் மீதான அரசின் நடவடிக்கை என்ன? என்று அமர்வின் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், ‘‘அது தொடர்பாக அரசு பரிசீலித்து வருகிறது’’ என்றார்.
பின்னர் அமர்வின் உறுப் பினர்கள் தங்கள் உத்தரவில் கூறியிருப்பதாவது: பருவமழை தீவிரமடைவதற்கு முன்பே தூர் வாரும் பணிகள் வேகமாக நடைபெற வேண்டும். டெண் டர் பணிகள் ஒருபக்கம் இருந் தாலும், மற்ற பணிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். இப்பணிகள் தொடர்பாக மாதம் ஒருமுறை விசாரணைக்கு எடுத் துக்கொள்ளப்பட வேண்டும் என்ற அரசுத் தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்க முடியாது. இப்பணிகள் தொடர்பாக 15 நாட்களுக்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இப்பணிகளை மனுதாரர் கண்காணித்து, இந்த அமர்வில் தெரிவிக்க அவருக்கு உரிமை உள்ளது என்று உத்தரவிட்ட அமர்வின் உறுப்பினர்கள், மனு மீதான அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.