மாமல்லபுரம்: கோப்புப்படம் 
தமிழகம்

மாமல்லபுரம் சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி: தொல்லியல் துறை அறிவிப்பு

கோ.கார்த்திக்

மாமல்லபுரம்

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால கலைச் சின்னங்களை நேரில் பார்வையிட்டுச் சென்றதால், வழக்கம்போல் சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு நாளை முதல் அனுமதி அளிக்கப்படும் என்று தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் நேற்று மாமல்லபுரம் வந்தனர். அங்கு, தமிழகப் பாரம்பரிய உடையில் பிரதமர் மோடி சீன அதிபரை வரவேற்று பல்லவர்களின் சிற்பக்கலைகளான ஐந்து ரதம், கடற்கரை கோயில், அர்ஜுனன் தபசு உள்ளிட்டவற்றை நேரில் பார்வையிட்டனர். மேலும், இருநாட்டுத் தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து, கடற்கரை கோயில் வளாகத்தில் அமர்ந்து ஆலோசித்தனர்.

இரு தலைவர்களும் மாமல்லபுரம் வந்ததால், பாதுகாப்புக் காரணங்களுக்காக சுற்றுலாத் தல வளாகம் மற்றும் சுற்றுலாத் தலங்களைக் கண்டு ரசிக்க சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக கடந்த 8-ம் தேதி தொல்லியல்றை அறிவித்தது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். மேலும், கலைச் சின்னங்களை சாலையில் நின்றவாறு கண்டு ரசித்தனர். இரு தலைவர்களும் மாமல்லபுரம் வந்து சென்றதால் பாதுகாப்பு கெடுபிடிகள் படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சுற்றுலாத் தலங்களான கடற்கரைக் கோயில், அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம், வெண்ணைய் உருண்டை பாறை உள்ளிட்ட கலைச் சின்னங்களை, சுற்றுலா தல வளாகத்தினுள் சென்று நாளை (அக்.13) முதல் நேரில் ரசிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியளிக்கப்படுகிறது என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கான டிக்கெட் கவுண்டர் நாளை முதல் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT