சென்னை
ஒட்டு மொத்த உலக தமிழர்களை பெருமைபடுத்திவிட்டார் பிரதமர் நரேந்திர மோடி என, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான 2-ம் கட்ட அதிகாரபூர்வமற்ற சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற்றது. கோவளத்தில் உள்ள தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலில் தங்கியுள்ள மோடி, கடற்கரையில் இன்று (அக்.12) காலை நடைப்பயிற்சி மேற்கொண்டபோது தூய்மைப் பணியில் ஈடுபட்டார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் கோவளத்தில் உள்ள கடற்கரையில் பிரதமர் மோடி தனி ஆளாக பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரித்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பு தொடர்பாக விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தில் சீன அதிபருடன் இரண்டு நாட்களாக தங்கியிருந்து, தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து, தமிழக உணவை உண்டு, தமிழகத்தின் பெருமைகளையும், மாமல்லபுரம் சிற்ப கலைகள் குறித்தும், தமிழகத்திற்கும் சீனாவுக்கும் இடையே இருந்த பண்டையகால நட்பு குறித்தும் விளக்கி, அதை மீண்டும் புதுப்பித்து, இரு நாட்டு உறவையும் பலப்படுத்தி, உலக நாடுகளின் ஒட்டு மொத்த கவனத்தை ஈர்த்தது மிகவும் பாராட்டுக்குரியது.
அதேபோல, இன்று காலையில் நடைபயிற்சியின் போது, கடற்கரையில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி, தூய்மையான இந்தியாவை உருவாக்க எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது. ஒட்டு மொத்த உலக தமிழர்களை பெருமைபடுத்திவிட்டார் பிரதமர் நரேந்திர மோடி," என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.