ஜிபிஎஸ் வசதி, துல்லியமான வரை படம் உள்ளிட்டவற்றுக்கு பயன்படும் ஐஆர்என்எஸ்எஸ்-1இ செயற்கை கோள் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் கிரண்குமார் கூறினார்.
ஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி-28 ராக்கெட் மூலம் நேற்று முன்தினம் இரவு விண்ணில் செலுத்தப்பட்ட இங்கிலாந்தின் 5 செயற்கைகோள்களும் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, ஹரிகோட்டாவில் செய்தி யாளர்களிடம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் கூறியதா வது:
ஜிபிஎஸ் போன்ற வசதிகளுக்கான தகவல்களை பெறவும், துல்லியமான நகரத் திட்டமிடல், சரியான வரைபடங் கள், பயணிகளுக்கு வழித்தடங்கள் பற்றிய தகவல்கள் ஆகியவற்றை அறியவும் ஐஆர்என்எஸ்எஸ் என்ற வரிசையில் 7 செயற்கைகோள் களை இஸ்ரோ ஏவுகிறது இதில் ஐஆர்என்எஸ்எஸ்-1ஏ (2013 ஜூலை), 1பி (2014 ஏப்ரல்), 1சி (2014 அக்டோ பர்), 1டி (2015 மார்ச்) ஆகிய 4 செயற் கைகோள்கள்ஏவப்பட்டுள்ளன. இன்னும் மூன்று ஏவப்படவுள்ளன. ஐஆர்என்எஸ்எஸ்-1இ செயற்கை கோளுக்கான சோதனைகள் முடிந்து விட்டன. வரும் நவம்பர் அல்லது டிசம்பரில் இது ஏவப்படும். அடுத்த இரண்டும் 2016 மார்ச் மாதத்துக்குள் ஏவப்படும். ஜிஎஸ்எல்வி மேக் II செயற்கைகோளின் கடைசிக்கட்ட சோதனைகள் நடந்துவருகின்றன. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அது விண்ணில் ஏவ தயாராகும்.
மங்கள்யானுக்கும் இஸ்ரோ மையத் துக்கும் இடையில் 55 நாட்களாக தொடர்பு இல்லாமல் இருந்தது. இப் போது தொடர்பு சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால் அதன் ஆயுள்காலம் நீளும் என்று எதிர்பார்க்கிறோம். சந்திராயான்-2க்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன. மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் அரசு அனுமதி பெற்ற பிறகே செயல்படுத்தப்படும்.
ஹரிகோட்டாவின் 2 ஏவுதளங்களில் இருந்து ஒரு ஆண்டுக்கு 10 ராக்கெட் வரை ஏவ முடியும். நாம் சராசரியாக 5 ராக்கெட்கள்தான் ஏவுகி றோம். இதை அதிகரிக்க வேண்டும்.
ஒருமுறைக்கு மேல் பயன்படுத்தக் கூடிய ராக்கெட்களை பரிசோதித்து வருகிறோம். அதன் சோதனை ஓட்டம் அக்டோபரில் நடைபெறும்.
இவ்வாறு கிரண்குமார் கூறினார்.
இஸ்ரோவின் வணிகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸ் தலைவர் வி.எஸ்.ஹெக்டே கூறும்போது, "வணிகரீதியில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு 28 செயற் கைகோள்களை விண்ணில் செலுத்த 6 நாடுகளுடன் ஒப்பந்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விண்ணில் செலுத்துவதற்கு வணிகரீதியிலான செயற்கை கோள்கள் இன்னும் நிறைய காத்திருக்கின்றன" என்றார்.