ராமேசுவரம்
இந்தியா - சீன நாடுகளுக்கு இடையிலான நல்லுறவை மேம்படுத்த பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயிலான மாமல்லபுரத்தில் நடைபெறும் சந்திப்பினை உலகமே உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சீன அதிபரின் தமிழக வருகையின் இந்த தருணதில் தமிழர்களுக்கும் சீனர்களுக்கும் உள்ள ஒற்றுமைகள் குறித்தும் பலரும் சிலாகித்துப் பேசி வருகின்றனர். ஆனால் கடந்த 56 ஆண்டுகளாக சீன வானொலி நிலையம் தமிழிலும் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வருவது தமிழகத்தில் பெரும்பான்மையினர்களுக்கு தெரியாது.
சீன வானொலி நிலையம் 1941-ம் ஆண்டு தொடங்கப்பட்ட உலகளாவிய ஒலிபரப்புச் சேவை ஆகும். தற்போது 43 மொழிகளில் ஒலிபரப்பப்பினை வழங்கி வரும் சீன வானொலி நிலையத்தின் தமிழ் ஒலிபரப்பு 01.08.1963ல் தொடங்கப்பட்டது.
தமிழ் மொழி பேசும் மக்கள் அதிகம் நிறைந்த இந்தியா, இலங்கை, அமெரிக்கா, கனடா, மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆரம்பத்தில் 30 நிமிடங்களே நிகழ்ச்சிகளை ஒலிபரப்பிவந்த சீன வானொலியின் தமிழ் சேவை தற்போது ஒரு மணி நேர வானொலி நிகழ்ச்சியைத் தயாரித்து நான்கு மணி நேர ஒலிபரப்புச் சேவையை வழங்குகிறது.
இந்திய நேரப்படி தினந்தோறும் இரவு 7.30 மணி முதல் 8.30 வரை ( 22.06 மீட்டர்—13600 கி.ஹர்ட்ஸ் மற்றும் 25.67 மீட்டர்—11685 கி.ஹர்ட்ஸ் அலைவரிசைகளிலும்) இரவு 8.30 மணி முதல் 9.30 வரை (25.67 மீட்டர்—11685 கி.ஹர்ட்ஸ் மற்றும் 30.96 மீட்டர்—9690 கி.ஹர்ட்ஸ் அலைவரிசைகளிலும்) ஒலிபரப்பாகிறது.
மீண்டும் மறுநாள் காலையில் 7.30 முதல் 8.30 வரை (19.66 மீட்டர்—15260 கி.ஹர்ட்ஸ் மற்றும் 22.06 மீட்டர்—13600 கி.ஹர்ட்ஸ் அலைவரிசைகளிலும்) காலை 8.30 முதல் 9.30 வரை வரையும் ( 21.85 மீட்டர்—13730 கி.ஹர்ட்ஸ் மற்றும் 22.06 மீட்டர்—13600 கி.ஹர்ட்ஸ் அலைவரிசைகளிலும்) மறு ஒலிபரப்பும் செய்யப்படுகிறது.
சிற்றலையில் ஒலிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் வானொலிப் பெட்டியில் சிற்றலை (SW) அலைவரிசைகளில் மட்டுமே கேட்க முடியும். மேலும் இணையதளம் (www.tamil.cri.cn), ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன் அப்ளிகேசன்கள் வாயிலாகவும் நிகழ்ச்சிகளை கேட்க முடியும்.
சீன வானொலி தமிழ் சேவையில் ஒலிபரப்பும் நிகழ்ச்சிகளில் அன்றாட சீன மொழி, சீனப் பண்பாடு, சீனாவில் இன்பப் பயணம் , சீன உணவு அரங்கம் , சீனத் தேசிய இனங்கள், சீனச் சமூக வாழ்வு , தமிழ் மூலம் சீனம் ஆகிய நிகழ்ச்சிகள் சீனாவின் கலை மற்றும் கலாசாரத்தினை அறிய உதவும் நிகழ்ச்சிகள் ஆகும். மேலும் நேயர் கடிதம், தமிழ்ப் பாடல், அன்று இன்று, சன்னல், ஒரு வாரப் பொருளாதாரம், கதைத் தேன், அறிவியல் உலகம் , மனமகிழ் நேரம், நேயர் நேரம், கேள்வியும் பதிலும் , முகநூலில் நேயர் முகம் ஆகிய நிகழ்ச்சிகளும் உண்டு. நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு சிறப்பு நேயராக தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் சீனாவிற்கு இலவச சுற்றுலா செல்லுவதற்கான வாய்பினையும் ஆண்டுதோறும் சீன வானொலி வழங்கி வருகிறது.
சீன வானொலி தமிழ்ப்பிரிவில் பணியாற்றும் ஒலிபரப்பாளர்கள் அனைவரும் சீனர்கள் என்றாலும் அழகாக தமிழ் பேசக்கூடியவர்கள். இதற்காக தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களில் முறையாக தமிழ் பயின்றுள்ளனர். மேலும் தங்களது பெயர்களைத் தூய தமிழில் மாற்றிக் கொண்டு ஒலிபரப்பி வருகின்றனர். தற்போதைய தமிழ்ப்பிரிவின் தலைவர் பெயர் "கலைமகள்'. இவரது இயற்பெயர் ஜாவோ ஜியாங். பூங்கோதை, நிலானி, கலையரசி, மலர்விழி, வான்மதி, ஜெயா, தேன்மொழி, ஈஸ்வரி, சரஸ்வதி, ஓவியா, இலக்கியா போன்ற அறிவிப்பாளர்களின் பெயர்கள் சீன வானொலி நேயர்களின் மத்தியில் மிகவும் பிரபலம்.
ஹெ லியான் என்ற இயற்பெயரைக் கொண்ட நிலானி என்ற ஒலிபரப்பாளர் தற்போது சீன வானொலியில் திருக்குறளை பண்டைய அறிவின் இன்றைய நலன் என்ற தலைப்பில் வழங்கி வருகிறார். இதில் திருக்குறளுக்கும் சீனாவில் உள்ள பழமொழிகளுக்கும் உள்ள ஒற்றுமைகளை விளக்குவதோடு மட்டும் இல்லாமல் இரு நாடுகளுக்குமிடையே சிந்தனைகளும் ஒரே மாதியாக இருப்பதை எடுத்துரைக்கிறார். சீன வானொலியின் பேஸ் புக் பக்கத்தில் வாரம் ஒரு வீடியோ பதிவாக வரும் இவரது இந்த நிகழ்ச்சி சமூக வலைதளங்களில் வைரலாகி விடுகிறது.
எஸ். முஹம்மது ராஃபி