மாமல்லபுரம்
மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த பிரதமர் மோடி, அங்குள்ள வரலாற்று சிற்பங்கள் குறித்து விளக்கி கூறியதைப் பார்க்க முடிந்தது. அர்ஜுனன் தபஸ் பகுதியில் இரு நாட்டு தலைவர்களும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இருந்து, சாலை மார்க்கமாக கார் மூலம் மாமல்லபுரம் வந்த ஜின் பிங்கை, பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார். பிரதமர் மோடி தமிழக பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, தோள் துண்டு என்று அணிந்திருந்தார். சிறிது நேரம் ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து, அர்ச்சுனன் தபசிற்கு இரு தலைவர்களும் சென்றனர்.
ஜின்பிங்கை, அர்ச்சுனன் தபசை சுற்றி காட்டிய மோடி, அங்குள்ள சிற்பங்கள், வரலாறு, தொன்மை மற்றும் அதன் சிறப்புகளை விளக்கி கூறினார். அர்ச்சுனன் தபசு பகுதியில் இருவரும் கைகுலுக்கி புகைப்படமும் எடுத்து கொண்டனர்.
பின்னர் வெண்ணெய் உருண்டை பாறையை இருவரும் ரசித்தனர். அதன் சிறப்புகள் குறித்தும் ஜின்பிங்கிடம் மோடி விளக்கிக் கூறியதைப் பார்க்க முடிந்தது.
அதே போல் ஐந்துரதம் பகுதியிலும் உள்ள சிற்பங்கள் பற்றி பிரதமர் மோடி, சீன அதிபரிடம் பேசியபடியே நடந்ததையும் தொலைக்காட்சிகள் காட்டி வருகின்றன.
பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் முறைசாரா சந்திப்பு இன்றும் (அக்.11) நாளையும் (சனிக்கிழமை, அக்.12) மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.