சிவகங்கை
கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிப்பதில் மத்திய அரசு தயக்கம் காட்டுவது ஏன் என மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
கீழடி அகழாய்வுப் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் வைகோ இன்று (வெள்ளிக்கிழமை) அங்கு ஆய்வு செய்தார்.
அவருடன் மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன், மதுரை திமுக எம்.எல்.ஏ., பிடிஆர்.பழனிவேல் ராஜன் ஆகியோர் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, "கீழடியில் எடுக்கப்பட்ட 16,000 பொருட்களில் வழியே எழுத்தறிவு பெற்ற மக்கள் வாழ்ந்துள்ளதை அறிய முடிகிறது. கீழடி அகழ்வாராய்ச்சிக்காக அரும்பணியாற்றியவர் அமர்நாத் ராமகிருஷ்ணன். நெசவு தொழில், உருக்கு தொழில் போன்ற தொழில்கள் நடந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் சலோனியின் 26.67 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சவக்கிடங்குகளும், கல்லறைகளும் மட்டுமே கிடைத்தன. அவற்றின் தொன்மை குறித்த ஆய்வு முடிவுகள் வெளி வருவதற்கு முன்னரே அப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக மத்திய அரசு அறிவித்தது.
ஆனால், தமிழகத்தின் கீழடியின் காலம் கி.மு.580 என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தும் ஏன் மத்திய அரசு கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கவில்லை.
இதில் மத்திய அரசு தயக்கம் காட்டுவது ஏன்? கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
கீழடி சுற்றியுள்ள 110 ஏக்கரிலும் அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும். கீழடி பகுதியில் சர்வதேச தரத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.
சிவகலை, தாமிரபரணி, காவேரி பூம்பட்டினம், ஆகிய இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும், தமிழக தொல்லியல் துறைக்கும், ஆய்வாளர்களுக்கும் பாராட்டுக்கள். கீழடி அகழாய்வுக்காக சிறப்பாக பங்காற்றிய அமைச்சர் பாண்டியராஜனை நான் பாராட்டியே ஆக வேண்டும்.
உலகின் முதல் நாகரிகம் தமிழர் நாகரிகம் மட்டுமே, இதை உலகம் முழுக்க விரைவில் ஒத்துக் கொள்வார்கள்" எனக் கூறினார்