சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்த பிரதமர் மோடி : படம் ஏஎன்ஐ 
தமிழகம்

சீன அதிபருடன் சந்திப்பு; சென்னை வந்தார் பிரதமர் மோடி: விருந்தோம்பலுக்குப் பெயர்பெற்ற தமிழகம் என புகழாரம்

செய்திப்பிரிவு

சென்னை

மாமல்லபுரத்தில் இன்று சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் நடைபெற உள்ள சந்திப்புக்காக சென்னை வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே அதிகாரபூர்வமற்ற 2-வது கட்டச் சந்திப்பு இன்று நடைபெறுகிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையையொட்டி சென்னை நகரில் மத்திய அரசும், தமிழக அரசும் பல்வேறுவிதமான சிறப்பு ஏற்பாடுகளையும், தீவிரக் கண்காணிப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செய்துள்ளனர்.

இந்தச் சந்திப்புக்காக தனி விமானத்தில் பிரதமர் மோடி இன்று சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர்.

சென்னை வருகை குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிடுகையில், "சென்னை வந்திறங்கியுள்ளேன். கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர்பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டுக்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு ட்வீட்டில் பிரதமர் மோடி கூறுகையில், "சீன அதிபர் ஜி ஜின்பிங்கை தமிழ்நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா- சீனா இடையேயான உறவு, இந்த முறைசாரா உச்சி மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறட்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தில் சிறிதுநேரம் இருந்த பிரதமர் மோடி, அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் கோவளம் சென்றார்.

பிடிஐ

SCROLL FOR NEXT