விழுப்புரம்
என்னைப் பொறுத்தவரை உள்ளாட்சித் தேர்தல் நடக்காது என, திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக விழுப்புரம் வந்திருந்த திமுக பொருளாளர் துரைமுருகன் இந்து தமிழிடம் பேசியதாவது:
"புதிய தமிழகம் கட்சியிடம் ஆதரவு கேட்பது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கிருஷ்ணசாமியை நிலையாகச் சொல்ல முடியாது. நிலையாக இருந்தால் பார்க்கலாம்.
திமுக பொறுப்பாளர்களில் மாற்றம் செய்யவேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
போக்குவரத்துத் துறையில் வருடாந்திரப் பராமரிப்பு ஒப்பந்தம் என்று அரசு அறிவித்திருக்கிறது. மாநில அரசு பேருந்துகளைத் தனியாருக்கும், மத்திய அரசு ரயிலைத் தனியாருக்கும் கொடுக்கிறார்கள். முதலாளித்துவப் பேருந்துகளை நாட்டுடமையாக்கியவர் தலைவர் கருணாநிதி. தற்போது முதலாளிகளின் கார் கதவைத் திறந்துவிடும் வேலையைச் செய்துவருகின்றனர். இது சோஷலிசத்திற்கு எதிரானது. மறுபடியும் முதலாளித்துவத்திற்கு அடிகோலுவதாகும்.
தொழில் முதலீட்டுக்காக முதல்வர் வெளிநாடு சென்றும் ஒன்றும் ஆகவில்லை. சமீபத்தில் காட்பாடி சென்றேன். மூடிய ஒரு தனியார் நிறுவனத்தை மீண்டும் பட்டியலில் சேர்த்துள்ளனர். இது ஒரு 'ஷோ' அவ்வளவுதான்.
உள்ளாட்சித் தேர்தல் என்னைப் பொறுத்தவரை நடக்காது".
இவ்வாறு துரைமுருகன் கூறினார்.