கோவை
காவிரி கூக்குரல் இயக்கத்தில் இணைந்தது பெருமையளிப்பதாக பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கூறினார்.
கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள, மகாத்மா கிரீன் இந்தியா மிஷன் நாற்றுப் பண்ணைக்கு நேற்று வந்த கங்கனா ரனாவத்தை ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள் வரவேற்றனர்.
அவருக்கு ஈஷா பசுமைக் கரங்கள் குழுவினர், நாற்றுப் பண்ணையை சுற்றிக் காண்பித்து, அவற்றின் செயல்பாடுகளை விளக்கினர். அங்குள்ள தாய் படுகையில் விதைகளை விதைத்த அவர், நாற்றுகளைத் தயாரிக்கும் கவர்களில் மண் நிரப்பியதுடன், அங்கு பணியாற்றும் கிராமப்புற பெண்கள், பசுமைக் கரங்கள் இயக்க தன்னார்வலர்களுடன் கலந்துரையாடினார். பின்னர், இலுப்பை மரக்கன்றை நட்டு வைத்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காவேரி கூக்குரல் இயக்கத்தில் இணைந்துள்ளது பெருமையளிக்கிறது. இது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக கருதுகிறேன். ஈஷா நாற்றுப் பண்ணைக்கு, மகாத்மா கிரீன் இந்தியா மிஷன் என்று புதிய பெயரைச் சூட்டியுள்ளனர். ஈஷாவுடன் இணைந்த பிறகு, எனக்கும், தமிழ்நாட்டுக்குமான உறவு ஆழமாகவும், வலுவாகவும் உருவெடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.